Wednesday, May 26, 2010

# பாவிகள் அவமதித்த பண்டார வன்னியன் வரலாறு









இலங்கையில் தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்கும் விதமாக தமிழர்களை இன்னும் கூட துப்பாக்கியால் சுட்டும் பட்டினி போட்டும் கொல்வது மட்டுமின்றி , அது ஈழத் தமிழினத்தின் தாய் நிலம் என்பதற்கான வரலாற்று பாரம்பரிய அடையாளங்களையும் தொடர்ந்து அழித்து வருகின்றனர் சிங்கள காட்டுமிராண்டிகள் .

அவற்றில் அண்மையில் நடந்த கொடுமை.... ஒரு காலத்தில் சிங்களே அரசே தமது தேசிய சின்னமாக அறிவித்திருந்த தமிழ் மன்னன் பண்டார வன்னியனின் நினைவுச் சின்னத்தை அழித்தது சிங்கள நாய்கள் அழித்ததுதான் .

இந்த பண்டார வன்னிய மன்னனின் வரலாறு அடிப்படையில் கலைஞரே பாயும்புலி பண்டார வன்னியன் என்ற ஒரு வரலாற்று நூலை எழுதிப் பேர் வாங்கியது எல்லாம் இப்போது அவரே நினைத்துப் பார்க்க விரும்பாத பழைய கதை .

யார் அந்த பண்டார வன்னியன் .? நினைவுச் சின்னம் அழிக்கப் பட்ட அந்த தமிழ் மன்னனின் நினைவை நாம் நம் நெஞ்சில் நிலைத்த சின்னமாகப் பதிய வைக்க வேண்டாமா?

படியுங்கள் அவனது வீர வரலாற்றை !

இலங்கையின் வடக்குப் பிரதேசத்தின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்கள் இணைந்த பகுதிதான் வன்னி நிலம் . வடக்கே கிளிநொச்சி, தெற்கே மதவாச்சி, கிழக்கு மேற்கு பகுதியில் கடலாகவும் உள்ள பிரதேசம் அது . அங்கு கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் கிணறுகள் வன்னியின் தொன்மையை உணர்த்தியுள்ளன .


கி.மு.543-ஆம் ஆண்டு நமது இந்திய நாட்டில் இருந்த மகத நாட்டு மன்னன் ஒருவன் , மிருக குணம் கொண்ட தன் மகன் விஜயனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் நாட்டை விட்டு விரட்டியடிக்கிறான். செல்லுமிடம் தெரியாமல் மரக்கலத்தில் சென்ற விஜயனும் அவனது கொடுங்கோல் ஆட்களும் இலங்கையின் இன்று புத்தளம் என்று அழைக்கப் படும் பகுதிக்கு அடுத்த தம்பப்பண்ணை என்ற இடத்தில் கரை சேர்ந்ததாக இலங்கையின் வரலாறு சொல்லும் நூலாக சிங்களர்களே ஒத்துக்கொள்ளும் மகாவம்சம் என்ற நூல் கூறுகிறது .

அகதிகளாய் வந்திறங்கிய விஜயன் தமழினத்தின் மூத்த குடிகளில் ஒன்றாக வரலாறு கூறும் நாகர் இன இளவரசி குவேனியைப பணிந்து நயந்து பின்னர் ஏமாற்றி மணந்தான் .அதோடு அதற்கு வடக்கே மாதோட்டம் என்ற பகுதியில் இருந்த தமிழ்க் குறுநில மன்னனோடு நட்பு கொண்டான் . அவன் மூலம் அன்று , தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னர்களோடு நட்பு கொண்டு இலங்கை மன்னனாக தன்னை முடிசூட்டிக்கொண்டு முப்பதாண்டு காலம் ஆட்சி புரிந்ததாகக் கூறப் படுகிறது .

விஜயன் இலங்கைக்கு அகதியாய் வந்தபோது சிங்களம் என்றொரு இனமே அங்கிருக்கவில்லை. ஆனால் தமிழினத்தின் மூத்த குடிகள் இருந்தனர்.

உண்மையில் “சிங்களம்’ என்பதே மொழி, இனம், பண்பாடு சார்ந்த சொல் அல்ல. சிங்களம் என்றால் தமிழில் கறுவாப்பட்டை என்று பொருள் . . அக் காலத்தில் கடலோடி வாணிபம் செய்தோர் அத் தீவுப் பகுதியை அதிகம் தேடிப் போனதே அங்கு கறுவாப்பட்டை என்ற தாவரம் கிடைக்கும் என்பதற்காகத்தான். கறுவாப்பட்டை அதிகம் கிடைத்ததால் அந் நிலப்பரப்பு சிங்களத் துவீபம் என அழைக்கப் பட்டது .
புவியியலாளர் டாலமி (உலக வரைபடத்தை முதன் முதலாக வரைந்தவர் ) இலங்கையில் தமிழர் பூமியை தனியாக காட்டி தமிழர் என்ற ஒரு இனம் அப்போது அந்த பிரதேசத்தில் இருந்ததாக் குறிப்பிட்டு உள்ளார் . வேறு எந்த இனமுமோ அப்போது இருந்ததாக அவர் கூறவில்லை .இருந்ததற்கான சான்றும் இல்லை .

விஜயனுக்குப் பின் பன்னிரண் டாம் அரசனாய் அசேலன் என்பவன் ஆண்ட காலத்தில், கி.மு.205-வாக்கில் வட தமிழகம் தொண்டை நாட்டில் இருந்து ஏலேலன் என்ற இளவரசன் பெரும் படையுடன் திரிகோண மலைக்கு சென்று , அனுராதாபுரம் சென்று அசேலனை வென்று மொத்த இலங்கைக்கும் தன்னை அரசனாய் அறிவித்தான். நடுநிலை தவறாமல் நீதி, நியாயம் , அருள், ஆண்மை, அறிவுடன் இலங்கைத் தீவு முழுமைக்கும் நல்லாட்சி தந்த ஏலேலன்தான் இலங்கைத் தமிழ் மன்னன் எல்லாளன் என்று அழைக்கப் படுகிறான் .

பிரபாகரன் கூட தனது போராட்ட அடையாளமாய் இலங்கை முழுதையும் ஆண்ட தமிழ்மன்னன் ஏலேலனை நிறுத்தவில்லை . பின்னாளில் வெள்ளைகாரர்கள் ஆட்சியை எதிர்த்து போரிட்டு (இன்று போலவே அன்றும் )துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டு, வீரமரணம் தழுவிய வன்னி நில மன்னன் பண்டார வன்னியனைத்தான் தனது போராட்டத்தின் அடையாளமாகக் குறிப்பிட்டார் . (இன்றும் பண்டார வன்னியனின் அடையாளங்கள் சிதைக்கப் பட அதுதான் முக்கியக் காரணம் . )


அப்படியானால் பண்டார வன்னியனுக்கும் நமது தாய்த்தமிழ்கத்துக்கும் சம்மந்தம் இல்லையா என்ற கேள்வி எழுகிறதா?

இதோ பதில்!

ஏலேலன் இலங்கை முழுதையும் ஆண்ட தமிழ்ப் பேரரசன்.ஆனால் பண்டாரக வன்னியனோ பாரம்பரியமாய் தன் மூதாதையர்கள் வாழ்ந்த சிறு நிலப்பரப்பில் தன்மதிப்போடும், சுய அதிகாரத்தோடும் வாழ விரும்பிய தமிழ் குறுநில மன்னன் பண்டார வன்னியனின் பூர்வீகம் ?

யாழ்ப்பாண வைபவ மாலை என்ற நூலின் படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன்தான் பண்டார வன்னியன் . வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் என்று பொருள்

பண்டார வன்னியன் காலத்துக்கும் முன்பே , 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் அவர்களால் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது.

வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள்தான் , .

டச்சுக்காரர்கள் இலங்கைத் தீவைக் கைப்பற்ற வந்த போதே தமிழர் ஆட்சி அங்கு நிலவியது என்பதை அவர்களின் சிலர் எழுதிய குறிப்பு ஏடுகளில் காணலாம் .

1782-ல் வன்னியை கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் , “”டச்சுக்காரர்கள் எத்தனையோ நாடுகளில் போர் புரிந்திருக் கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் வேறு எங்கும் அவர்கள் காணவில்லை” என்று குறிப்பிடுகிறார் .

( இலங்கையின் வரலாற்றில் திருகோணமலையைக் கைப்பற்றவே பலரும் போரிட்டு மடிநது வழக்கம் . அதே காரணத்துக்காக பண்டார வன்னியன் வாழ்ந்த அதே காலத்தில் கண்டி மன்னனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையில் சண்டை நடந்தது . அந்த நேரத்தில் இருந்த சக்தி வாய்ந்த ஆங்கிலேயப் பிரதி நிதி ராபர்ட் நாக்ஸ் என்பவன் கண்டி மன்னனால் மூதூர் என்ற ஊரில் வைத்து சிறைப்பிடிக்கப்பட்டான் . பல வருடங்கள் சிறையில் கழித்த ராபர்ட் எப்படியோ சிறையில் இருந்து தப்பி அனுராதபுரத்தை நோக்கி ஓடினான் . அனுராதபுரத்தை அடைந்தவுடன் அங்குள்ள மக்களையும் ஆட்சியையும் பார்த்து வியப்படைந்தான் .அங்கு ஆட்சி செய்த மன்னனும் தமிழ் மன்னன்தான் . அவன் பெயர் கைலாய வன்னியன் .

ராபர்ட் நாக்ஸ் தனது குறிப்பேட்டில் தான் வடக்காக தப்பிச்சென்ற போது வயல்வெளிகளை எருதுகள் உழுவதையும் அங்குள்ள மக்கள் சிங்கள மொழியை பேசவில்லை என்றும் அவர்களுக்கு சிங்கள மொழியே தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளான் .

மேலும் அங்கு கயிலாய வன்னியன் ஆட்சிசெய்த நாட்டை கயிலாய வன்னியன் நாடு என்றும் அவன் யாழ்ப்பாணத்தின் தெற்கு மற்றும் வன்னியின் கிழக்குப்பகுதியையும் ஆண்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளான் ராபர்ட் நாக்ஸ் )

டச்சுக்காரர்கள் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை வன்னிக்காடுகள் என வன்னி மக்கள் இடைவிடாமல் போர் நடத்தி வந்தனர். அவர்களின் வழியில் வந்த மறக்க முடியாத மாவீரன்தான் பண்டாரக வன்னியன்.

வெள்ளையர்கள் முல்லைத்தீவில் அமைத்திருந்த கோட்டையை முற்றாக அழித்து நிர்மூலம் செய்தவன் பண்டார வன்னியன் .

அவனது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டாரக வன்னியன்

முல்லைத்தீவில் இருந்து வற்றாப்பளை அம்மன் கோவில் வரை உள்ள 2000 சதுர மைல் நிலத்தை ஆட்சி செய்து வந்தான் பண்டார வன்னியன் . தனது சகோதரர்களை முக்கிய பதவிகளில் வைத்து ஆட்சி செய்து வந்தான் . தனது தம்பி கைலாய வன்னியனை அமைச்சராகவும் தனது இறுதி சகோதரன் பெரிய மன்னன் என்ற பெயருடையவனை தளபதியாகவும் நியமித்திருந்தான் .

அதே நேரம் காக்கை வன்னியன் எனும் இன்னொரு மன்னன் வன்னியின் இன்னொரு நிலப்பரப்பை ஆண்டு வந்தான் .

பண்டாரவன்னியனுக்கு நளாயினி என்ற சகோதரியும் உண்டு . நளாயினி தமது அவைப புலவர் மீது காதல் கொண்டிருந்தாள்.

மன்னன் காக்கை வன்னியன் ( மேற்குறிப்பிட்ட, இன்னொரு நிலப்பகுதி மன்னன் ) நளாயினி மீது காதல் கொண்டு அவளைத் திருமணம் செய்து தரும்படி பலமுறை பண்டார வன்னியனுக்கு சேதி அனுப்பியிருந்தான் .ஆனால் பண்டாரவன்னியன் எதோ காரணத்தால் தயங்கி இருக்கிறான் .

இந் நிலையில் புலவரும் நளாயினியும் காதல் கொண்டுள்ளதை கண்ட காக்கை வன்னியன் கோபம் கொண்டு புலவருடன் போரிட்டான் . போரில் வென்றது புலவன் !. எனினும் பக்கத்த் நாட்டு மன்னன் என்பதாலோ என்னவோ , மன்னனை உயிரோடு திருப்பி அனுப்பினான் அனுப்பினான் .

அதன்பின்புதான் புலவனும் அரச குலத்தில் வந்தவன் என்பது பண்டார வன்னியனுக்குத் தெரிந்திருகிறது . எனவே தனது சகோதரியின் காதலுக்கு சம்மதித்தான் பண்டார வன்னியன் . .

விஷயம் அறிந்த காக்கை வன்னியன் பொருமினான் . பண்டாரவன்னியன் மீது வெளையர்கள் பல முறை படை எடுத்து தோல்வி அடைவதைப பார்த்த காக்கை வன்னியன் , தன் ஆசையின் தோல்விக்குப் பழி தீர்க்க வெள்ளையர்களுடன் சேர்ந்து சதி செய்து பண்டார வன்னியனை கொல்ல திட்டமிட்டான் .

நல்லவன் போல நடித்து பண்டார வன்னியனிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து கொண்டு சமயம் பார்த்து ஆங்கிலப் படைகளிடம் பண்டார வன்னியனை சிக்க வைத்தான்

பலமுறை படை எடுத்து வந்தும் வெல்ல முடியாத பண்டார வன்னியனை மூன்று ஔரத்தில் இருந்தும் படை எடுத்து வந்து தாக்கி வென்றனர் .

1803 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் கற்சிலைமடு என்ற இடத்தில் அங்கிலேய தளபதி ரிபேக் என்பவனால் பண்டார வன்னியன் கொல்லப்பட்டான் .


எனினும் அவனது வீரத்தை வியந்து அவனைக் கொன்ற அந்த ஆங்கிலேயத் தளபதி ரிபேக்கே பண்டார வன்னியனுக்கு சிலை ஒன்றும் நடுகல் சின்னமும் வைத்தான்

ஒருவனுக்கு அவனுக்கு பிடித்தவர்கள் உறவினர்கள் யார் வேண்டுமென்றாலும் சிலை வைக்கலாம் ஆனால் எதிரியாலேயே வைக்கப்பட்ட சிலை பண்டாரவன்னியன் சிலை .

இந்த நூற்றாண்டில் இந்த ஆண்டில் சுமார் இரண்டு வாரம் வரை காலத்தை வென்று நின்றிருந்த அந்த நடுகல்லைதான் தற்போது உடைத்து இருக்கின்றனர் சிங்கள வெறியர்கள் . இது சிங்களனின் அற்ப புத்தியையே காட்டுகிறது

முல்லைமணி என்பவர் மற்றும் அவர்களின் சக நண்பர்களின் முயற்சியின் விளைவாய் எத்தனையே ஆண்டுகளுக்குப் பிறகு 2002ம் ஆண்டு கற்சிலைமடுவில் பனை மரக் காட்டில் பண்டார வன்னியனுக்கு புதிய சிலை ஒன்றும் நிறுவப்பட்டது .

பண்டார வன்னியன் ஆண்ட நாட்டின் எல்லையாக இருந்த வற்றாப்பளையில் உப்பு நீரிலே விளக்கெரியும் கண்ணகி அம்மன் ஆலயம் ஒன்றும் இருந்தது .இப்போது அவை எல்லாம் என்ன ஆயின என்பதே தெரியவில்லை .

இப்படி எதிரியும் பாராட்டிய பண்டார வன்னியன் வீரம் சொன்ன சின்னங்கள் அழிக்கப் பட்ட இந்த நேரத்தில்..... கலைஞர் எழுதிய பாயும்புலி பண்டார வன்னியன் தொடர் இரண்டாம் முறையாக முரசொலியில் வெளியிடப் பட்டு நிறைவுற்றபோது..... முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிகையை இங்கே நினைவு கூர்வதன் மூலம் யாருடைய மனசாட்சியாயாவது அசைக்க முடிகிறதா என்று பார்ப்போம் .

"இரண்டாவது முறையாக முரசொலியில் வெளிவந்து கொண்டிருந்த "பாயும் புலி பண்டாரக வன்னியன்'' வரலாற்று ஓவியம்; முடிவுற்றுவிட்டது. எத்தனை முறை அந்த வீரனின் வரலாறு வெளிவரினும்; அந்த வீரகாவியம் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

அதை விளக்கவே இந்தக் கடிதம்: 1991ஆம் ஆண்டு வாக்கில் வெளியிடப்பட்டதும், நான் எழுதிய வரலாற்றுப் புதினமுமான "பாயும் புலி பண்டாரக வன்னியன்'' எனும் எழுச்சி மிக்க காவியத்தில், நான் படைத்துள்ள கதாபாத்திரங்கள் பண்டாரக வன்னியனும், அவன் உள்ளங்கவர்ந்த காதலி, குருவிச்சி நாச்சியாரும், அவன் அருமைத் தங்கையர், நல்ல நாச்சியும், ஊமைச்சி நாச்சியும் இலங்கை மண்ணில் தமிழர்களின் உரிமை காக்கப் போராடியவர்கள் என்று நான் சித்தரித்துள்ளேன்.

துரோகிகளைச் சந்திக்க நேர்ந்த அந்த தூயவனுக்கு நல்ல நண்பர்களும் இல்லாமலில்லை. கி.பி. 1815ஆம் ஆண்டு வரையில் கண்டியை ஆட்சி செய்து ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்து வேலூர் சிறையில் பதினாறு ஆண்டுக்காலம் அடைக்கப்பட்டு அந்தச் சிறையிலேயே உயிர்நீத்த கண்ணுசாமி என்ற விக்ரம ராஜ சிங்கன், பண்டாரக வன்னியனின் உயிர்த்தோழனாவான்.

காட்டிக் கொடுப்போரால் மனம் நொந்த அந்த மாத்தமிழனின் எரிமலை இதயத்தை சிறிது மாற்றியமைத்து, அவன் இளைப்பாறும் குளிர் தருவாக குருவிச்சி நாச்சியார் என்னும் கோதையொருத்தியும் இருந்தாள்! மனஉறுதியின் அடிப்படையில் கட்டப்பட்ட அந்தக் காதல் மாளிகை, ஒரு வைராக்கிய மாளிகை! தியாக மாளிகை!

போர்வாளைத் தனது கொடியின் சின்னமாகக் கொண்டு, புலியெனப் பாய்ந்து களம் பல கண்ட, பண்டாரக வன்னியனின் உருவமோ; உயர்ந்த தோற்றம்! விரிந்த மார்பு! ஒடுங்கிய இடை! பரந்த நெற்றி! உரமேறிய தோள்கள்! கூரிய பார்வை! அந்தத் தீரனின் அஞ்சாநெஞ்ச வாழ்க்கையின் அடிச்சுவட்டில் விளைந்த வீரமண்ணின் தீரர்களையும், வீரர்களையும், தியாகிகளையும் அவர்களின் சரிதங்களையும் முத்தாரமாகக் கோத்து நான் வழங்கிய அந்தப் போர்க் காதையின் முடிவை எவ்வாறு தீட்டியுள்ளேன் என்பதைப் படித்துப் பார்த்தால், இதோ படித்துத்தான் பாருங்களேன்!"

என்றெல்லாம் எழுதிக் குவித்த அதே முதல்வர் கருணாநிதிதான் ...

எதிரிகளின் மரியாதையையும் வரலாற்றையும் கூட வென்று நின்ற பண்டார வன்னியனின் நினைவுச் சின்னங்கள் இன்று வேசித்தனமாக அழிக்கப் பட்டதை எதிர்த்து , கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை ஒரு வரி கூட எழுதவில்லை என்றால் இந்தக் கொடுமையை - அவலத்தை எங்கு போய்ச் சொல்ல?

Tuesday, May 11, 2010

# இந்தியக் கௌபாய்களின் இனமான சிங்கம்





தமிழ் சினிமாவுக்கு கௌபாய் படங்கள் ஒன்றும் புதிதில்லை . ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் குடிசைத் தொழிலாகவே கௌபாய் படங்கள் இருந்திருக்கின்றன . ஆனால் இப்படி ஒரு அற்புதமான கௌபாய் திரைப் படம் தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே இதுவரை வந்ததில்லை . இனியும் வரப் போவதில்லை . ஒருவேளை வந்தால் மறுபடியும் அது இயக்குனர் சிம்புதேவனின் படமாக இருந்தால் மட்டுமே உண்டு .


எல்லோரும் நேசிக்கப் பட்ட கலாச்சாரங்களில் கௌபாய் கலாச்சாரமும் ஒன்று . ஸ்பெய்ன் நாட்டில் துவங்கி வட அமேரிக்கா வரை அது பரவியதை உலக வரைபடத்தில் கௌபாய் தொப்பி உருண்டு உருண்டு பறப்பதைக் காட்டும்போதே மீண்டும் ஒருமுறை நாம் பரவசப் படப் போகிற ஒரு உலகத்துக்குள் கூட்டிப் போக முடிவு செய்து விட்டார்கள் என்று புரிகிறது . இத்தாலிய கௌபாய்கள் முதற்கொண்டு தாய்லாந்து கெளபாய்கள் வரை இதுவரை கௌபாய் உலகத்துக்கு அறிமுகமில்லாத ரசிகர்களுக்கு இயக்குனர் குரலில் அறிமுகம் கொடுப்பதில் துவங்கும் சிரத்தையும் அக்கறையும் கடைசி வரை கரம் சிரம் புறம் நீட்டாமல் பொறுப்பாய் படம் முழுக்க பயணித்துக் கிடக்கிறது .

ஷோலேபுரம் ( சீரியசான கௌபாய் படங்களின் இந்திய முத்திரையாக அமைந்த இந்திப் படம் ஷோலே ஞாபகம் வருகிறதா?) என்று ஒரு கௌபாய்த்தனமான ஊர் . அங்கு இருந்த ஒரு விலை உயர்ந்த முள்ளங்கி வைரத்தை( சைஸ் அப்படி) திருடியதற்காக அல்ல ...... முட்டை பரோட்டாவும் பிரியாணியும் தின்று விட்டு நன்றாகத் தூங்கி திருடுபோகக் காரணமான குற்றத்துக்காக --- சிங்காரம் என்ற அப்பாவிக்கு ( ராகவா லாரன்ஸ்) தூக்குத் தண்டனை விதிக்கிறது , காந்தி படத்துக்குப் பதிலாக அமிதாப் ஜி படமும் ( காரணம் ஷோலே படம்) நீதிதேவதையின் கையில் உள்ள தராசுத்தட்டுக்குப் பதிலாக ஒரு லிட்டர் முகத்தல் அளவைப் பாத்திரமும் தந்திருக்கும் வித்தியாச நீதிமன்றம் .

தூக்கு போடும் தருணத்தில் டகில பாண்டி ( இளவரசு ) தலைமையிலான சிலர் சிங்காரத்தைக் காப்பாற்றுகின்றனர் . அவர்கள் இருக்கும் ஊர் ஜெய்ஷங்கர்புரம் ( தமிழில் அதிக கௌபாய் படங்களில் நடித்தவர் ) ஒரு காலத்தில் ஹாலிவுட் படங்களின் கௌபாய் ஹீரோக்கள் , பின்னர் கர்ணன் போன்றவர்கள் ஆண்ட ஊர் (கர்ணன் தமிழின் நிறைய கௌபாய் படங்களை இயக்கியவர் . ) எம்.ஜி .ராமச்சந்திரன் ஆட்சிக் காலத்தில் ஓகோவென்று இருந்த ஊராம் அது . (வேட்டைக்காரன் எம்.ஜி.ஆர் .கௌபாய் உடையில் நடித்த படம் ) ஆனாலும் ஜெய்ஷங்கர் பிற்காலத்தில் ரொம்பகாலம் ஆண்டதால் அவர் பெயரே ஊருக்கு நிலைத்து விட்டது .அங்கு இருந்த சிங்கம் என்ற தலைவனைக் காணவில்லை . ஆனால் அவர்களிடம் நம்ம ஷோலேபுரத்து சிங்காரத்துக்கு தேவையான அதே மாதிரி முள்ளங்கி வைரம் இருக்கிறது . அது கிடைத்தால் கொடுத்துவிட்டு தமது ஊர் தூக்குத்தண்டனையில் இருந்து சிங்காரம் தப்ப முடியும் . ஆனால் சிங்காரம் ஜெய்ஷங்கர் புரத்துக்கு ஒரு பெரும் உதவி செய்ய வேண்டும் .

அதாவது தமிழ் சினிமா உலகின் மிகக் கொடிய வில்லனான அசோகனின் மகன் கிழக்கு கட்டை. (நடிகர் நாசர்) பிரபல ஹாலிவுட் நடிகர் கிளின்ட் 'ஈஸ்ட் உட்' என்பதன் தமிழாக்கமே கிழக்கு கட்டை . அவன் கூட்டணியில் பத்மப் பிரியா , சாய்குமார் போன்ற வில்லன் வில்லிகள் . இந்த கொடூர வில்லன்களிடம் இருந்து ஜெய்ஷங்கர் புரத்துக்கு சிங்காரம் விடுதலை வாங்கித் தரவேண்டும் .
இடையே இவர்கள் எல்லோருமே பயப்படுகிற அளவுக்கு வாழும் செவ்விந்தியக் கூட்டம் . (நடிகர் செந்தில் , எம்.எஸ்.பாஸ்கர் , இளவரசியாக காதல் சந்தியா மற்றும் பலர் ) "ஜெய்ஷங்கர் புரா ஷப்பா ஜெர்க்கா ஷயா துர்" என்று (ஜெய்ஷங்கர் புரம் ஸ்டைல்ல ஜெர்க் அடிக்கிறமாதிரி ஒரு பாட்டு பாடு என்று பொருள் ) என்று பேசும் எம் எஸ் பாஸ்கர் . அவர் பேசுவதை மட்டுமல்லாமல் அழுவது சிரிப்பது மூச்சு வாங்குவது என்று எல்லாவற்றையும் தமிழில் மொழி பெயர்க்கும் சாம்ஸ் (மரணத் தறுவாயிலும் மொழி பெயர்ப்பது பிரம்மாதமான நகைச்சுவை)

ஜெய்ஷங்கர் புரம் மக்களுகாக செவ்விந்தியர்களின் அன்பைப் பெற்று கிழக்கு கட்டையின் ஆசைப்படி ஒரு பெரிய புதையாலை எடுத்து அவனுக்கு கொடுத்து , இடையே டகிலபாண்டியின் துரோகத்தையும் சமாளித்து ... சிங்காரம் ஜெயிக்கிறானா என்பதுதான் கதை ......

--என்று சும்மா சொல்லிவிட்டுப் போக இது ஒன்றும் வழக்கமான சினிமா அல்ல . பார்க்கும்போதுதான் படத்தில் நீள , அகல , உயர ,ஆழ கன பரிமாண பரிணாமங்கள் புரியும் .

பொதுவாக சிம்புதேவனின் கதைக் கரு வித்தியாசமாக இருக்கும். எளிமையாகவும் இருக்கும் . அதேநேரம் தேனீ கூட்டில் தேன் சேகரிப்பது போல திரைக்கதையில் ஒவ்வொரு காட்சியில் காட்சி அமைப்புகளில் தனித்தனி ஷாட்களில் என்று எந்த இடத்தையும் விட்டு விடாமல் எதாவது ஒரு விஷயத்தை கேலியாக கிண்டலாக இல்லை மறை காயாக சொல்லி ஒவ்வொரு கிலோவாக லோடு ஏற்றி அடர்த்தியான திரைக்கதையை நகைச்சுவையாகவும் கொண்டு வந்து அசத்தி விடுவது சிம்புதேவனின் ரகசிய சினிமா சூத்திரம் . இந்தப் படத்திலும் அதே அசத்தல் .

படத்தில் வரும் சாராயக் கடையின் பெயர் பாஸ்மார்க் . துணை வாசகம்? 'குடி குடியை ரேப் செய்யும்'. என்பதுதான் . கெடுக்கும் என்ற வார்த்தையின் இன்னொரு உருவாக்கம் .
ஒரு கடையின் பெயர் ரிவிட் ஃப்ரெஷ் (ஞா பகம் வருகிறதா ரிலையன்ஸ் ஃப்ரெஷ் ?) ஒரு பத்திரிக்கையின் பெயர் தின ஒப்பாரி (யாராவது பதிவு பண்ணிடப் போறாங்க)

வில்லனின் ஊருக்கு தமிழில் உசா புரம் என்று பெயர் . அதன் ஆங்கில பெயர் U S A PURAM . அந்த ஊர் ஜெய்சங்கர் புரத்தோடு அணுகுண்டு ஒப்பந்தம் போட வரும் . நாங்கள் அணுகுண்டு தருவோம் . ஆனால் அதை நீங்கள் வெடிக்கக் கூடாது . தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது . சத்தமாக தும்மக் கூடாது . என்றெல்லாம் நிபந்தனைகள் . பெரியவர் ராகவன் போய்க் கேட்பார் . "வாயு கழியும்போது சத்தம் வருமே என்ன செய்வது . ?" அதற்கு u s a புரத்தார் சொல்லும பதில் "பயிறு பட்டாணி போன்றவற்றை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளாதீர்கள் " என்பதுதான் . நகைச்சுவைக் காட்சியில் உலகாளாவிய கோபக் கிண்டல் !

எதற்கெடுத்தாலும் டாட் காம் ஆரம்பிக்கும் பழக்கத்தைக் கண்டித்து ஜெய்சங்கர் சிலையில் www,jaishankar.com என்றும்அசோகன் சிலையில் www.ashokan.com என்றும் எழுதியிருப்பது முதற்கொண்டு பல இடங்களில் இந்த நகாசு நகைச்சுவை கலக்குகிறது . இப்படி படம் முழுக்க ஜொலிக்கும் இனிப்பான சிறு சிறு விமர்சன கிண்டல் விவரணைகள் அபாரம் !

ஒரு காட்சியில் செவ்விந்தியர்களின் கழிவறைகளில் தண்ணீருக்கு மாறாக பேப்பர் இருக்கும் . அந்த பேப்பர்கள் ..... நமது கட்சிகளின் தேர்தல் அறிக்கை !.

மக்கள் காலமாக வாழும் ஊரில் திடீரென்று சுங்கச் சாவடி அமைத்து அவர்கள் சாலையைப் பயன்படுத்துவதற்கே காசு வாங்கும் நவீன டோல்கேட்களை புரட்டி அடிக்கிறது ஒரு காட்சி . புதையல் தேடித் போகும்போது வழியில் புதையல் சாலை சுங்கச் சாவடி இருக்கும் . குதிரைக்கு பத்து ரூபாய் . ஜட்காவுக்கு இருபது ரூபாய் என்று போர்டு இருக்கும் . சிங்கிளா டபுளா என்று கேட்பான் பணம் வசூலிப்பவன் . நெடுஞ்சாலைத் துறை என்பதற்கு பதில் இங்கே கொடுஞ் சாலைத் துறை என்று போர்டு வைத்திருக்கிறார் சிம்புதேவன் . அங்கே வசூலிக்கும் மனிதன் அந்த மண்ணுக்கே சம்மந்தம் இல்லாத ஒருவனாகக் காட்டி அதன் மூலம் நமது சுங்கச் சாவடிக் கொள்ளைகளின் மூலம் எது என்பதை உணர்த்தும் தொனி, பாராட்டுக்குரியது .

புதையல் தேடித் போகும்போது பல புதிர்கள் இருக்கும் . அதில் ஒரு புதிர் .'நம் இனத்தாரை அல்லையில் குத்தி அகதி ஆக்கும்போது நாம் என்ன செய்வோம்' . நான்கு வாய்ப்புகள் . 'கிரிக்கெட் பார்தது உணர்ச்சி வசப்படுவோம் . கலக்கப் போவது யாரு பார்தது கை தட்டுவோம் . சினிமா பார்தது சீட்டி அடிப்போம் ..காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவோம் ..' என்று போகும் காட்சி சிரிக்க சீரியஸ் நகைச்சுவையின் (?) சிகரம் ! . தமிழின் மொத்த எழுத்துக்களைச் சொன்னால்தான் புதையல் எடுக்கும் முயற்சியில் அடுத்த கட்டத்துக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் நாயகன் உட்பட யாருமே சரியான விடை தெரியாமல் தடுமாறுவது வேதனை நகைச்சுவை ( புது பரிமாணம்) தவறாக சொன்னாலும் கூட தம்மை அறியாமல் சரியான எண்ணில் கால் வைத்து தப்பிக்கும் காட்சியில் நீ தமிழைக் காக்கா விட்டாலும் தமிழ் உன்னைக் காக்கும் என்கிறார் இயக்குனர் .

இது போல படம் முழுக்க பலப்பல காட்சிகள் சிந்தனைக் கண்ணுக்கு சீரிய விருந்து .

"பாஸ் நாங்க மோசம் போயிட்டோம்" என்ற அடியாட்களின் கதறலுக்கு "உங்களை கற்பழிச்ச பொண்ணுங்க யாருடா" என்ற சாய் குமாரின் எதிர்க்கேள்வியில் வசனம் புதிய ட்ரெண்டை உருவாக்கும் அதே நேரம் ,
இன்னொரு காட்சியில் நாசர் "நம்மை எதிர்க்க இங்க பல ஊரு காரனுங்களும் ஒண்ணு சேர மாட்டானுங்க . சோப்பு டப்பா விக்க வந்த ராபர்ட் கிளைவ் கும்பலுக்கு நூத்தம்பது வருஷமா கழுவற வேளை பார்த்த பசங்க தானே இவனுங்க தன்னோட இனமே நடுரோட்டுல நின்னாலும் சரி நடுக் கடல்ல நின்னாலும் சரி இவனுங்களுக்கு ரோஷமே வராது ' என்ற வசனம் எரிமலைக் குழம்பையே எச்சிலாய் உமிழ்கிறது .

"நான் செத்துப் போனதை யாருக்கும் சொல்ல வேணாம் . தலைவன் இல்லன்னு தெரிஞ்சா மக்கள் சோர்ந்து போயிடுவாங்க . அதனால என் மரணத்தை மறைச்சுடுங்க இன்னொரு தலைவன் வருவது உறுதி " என்ற ரீதியில் சொல்லிவிட்டு சிங்கம் சாகும்போது பேசாமல் அந்தக் கதாபாத்திரத்துக்கு புலி என்று பெயர் வைத்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் எழுகிறது .

இங்கே ஆக்ஷன் ஹீரோக்கள செய்யும் அலப்பறை களுக்கும் அறை கொடுக்க தயங்கவில்லை இயக்குனர் . ஒரு ஈ விளக்கிச் சுற்றிச சுற்றி வந்து சத்தம் போட ஹீரோ மூணு ரவுண்டு சுட்டு தள்ள , " ஒரு உயிரைக் கொல்றது பாவமில்லையா ? என்ற கேள்விக்கு "நான் அந்த ஈயோட உயிரை எடுக்கல ..இறக்கைய மட்டும்தான் சுட்டேன் " என்று சொல்வதும் அடுத்து இறக்கை இல்லாத ஈ ஊர்ந்து போவதும் வெடிச் சிரிப்பு . ( இதுக்கு பிராணிகள் நல வாரியத்துல இருந்து ஏதும் எதிர்ப்பு வரலியே ? )

இப்படி படம் முழுக்க பட்டாசு மழைதான் .

பொதுவாக பிளாஷ்பேக் என்பதை எதாவது ஒரு கதாபாத்திரம்தான் விவரிக்க முடியும் . ஆனால் கடைசியில் நாசர் டெல்லிகணேஷ் பிளாஷ்பேக் துண்டுகள் தவிர மற்ற எல்லா இடங்களிலும் இயக்குனரின் கோணத்தில் பிளாஷ்பேக் சொல்லப் படுவது இதுவரை எந்த மொழிப் படத்திலும் நாம் பார்த்திராத புது உத்தி .

இயக்குனர் சிம்பு தேவனின் பிரேம்களும் அழகப்பனின் ஒளிப்பதிவும் கட்டிப் பிடித்துக் கானம் பாடிக் காதலிக்கின்றன .இதோடு படத்தின் டோன் பொருந்தி வர மூன்றும் சேர்ந்து ஒரு முழுமையான ஹாலிவுட் செழிப்புப் படத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன .லொகேஷன்கள் தேர்வு பிரம்மாண்டம் மற்றும் பிரம்மாதம்.

ஜி.வி. பிரகாஷ்குமாரின் பாடல் இசையைவிட சபேஷ் முரளி இரட்டையரின் பின்னணி இசை பெரும்பலம் .. அதிலும் அந்த தீம் மியூசிக் படத்தின் பிரம்மாண்டத்துக்கு உற்ற தோழனாய் ஊழியம் செய்கிறது . சபாஷ் சபேஷ் முரளி

சொந்த வேகம் பாதி .. தொழில்நுட்பத்தால் வந்த வேகம் பாதி என்று துப்பாக்கி சுழற்றும் காட்சிகளில் நம் கருவிழிகளை வியப்பால் சுழற்றி அடிக்கிறார் லாரன்ஸ் . நாயகிகளுக்கு வாய்ப்புக் குறைவு ஆனால் வேலையில் நிறைவு . பாஸ்கர் சாம்ஸ் கூட்டணி நகைச்சுவையில் மனம் விட்டு சிரிக்க முடிகிறது .

கட்டுமாணமும் கம்பியூட்டர் கிராபிக்சுமாய் பின்னி பெடல் எடுத்திருக்கும் ஆர்ட் டைரக்டர் முத்துராஜின் பெயரில் எதாவது ஒரு ஸ்டுடியோவில் ஒரு நிரந்தர அரங்கமே போட்டு வைக்கலாம் . தப்பே இல்லை . உடையலங்கார நிபுணர் சாய் முழுமையான பாராட்டுக்குரியவர் .

இது போன்ற படங்களில் இணை உதவி இயக்குனர்கள் ராட்சஷ உழைப்பு உழைக்காவிட்டால் இந்த அளவு நுண்மையாக வர வாய்ப்பில்லை . அவர்களும் பாராட்டுக்குரிவர்கள்.

கிளின்ட் ஈஸ்ட் உட் ,. கர்ணன் , எம்.ஜி.ஆர், அசோகன் ஜெய்ஷங்கர் மேஜர் சுந்தர்ராஜன் எல்லாரையும் அடையாளப்படுத்தி விட்டு பாடல்களையும் காட்டிவிட்டு பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த புனைவுக் கதை என்று சொலவது ஒரு சறுக்கல் . அதே போல கொடுஞ்சாலைத்துறை என்ற வார்த்தையை முக்கியத்துவம் கொடுத்து காட்டியிருக்கலாம் . சமையலறையில் இருக்கும் அழகான பெண்ணின் முகத்தில் ஒட்டிய சின்ன கரித் தீற்றல்கள் இவை .

வித்தியாசமான அர்த்தமுள்ள இலட்சியமுள்ள அதேநேரம் சுவையான ரொம்ப அரிதான படைப்பு

நிஜமாகவே சிங்கம் தான் !

மகுடம் சூடும் கலைஞர்கள்
****************************************
இயக்குனர் சிம்புதேவன்
ஒளிப்பதிவு அழகப்பன் .
பின்னணி இசை சபேஷ் -- முரளி
கலை இயக்கம் முத்துராஜ்
உடையலங்காரம் சாய்
தயாரிப்பாளர் அகோரம்
முதன்மை இணை இயக்குனர் விஜய் சங்கர்
இணை இயக்குனர்கள் ஜெகதீஷ் , சிவம் , கணேஷ்
துணை இயக்குனர்கள் ராஜ்குமார் , ரவிகுமார்