Wednesday, June 30, 2010

# இரவுக்கு ராஜா கண்ணதாசன்






மக்களுக்குப் புரியாத வார்த்தைகளில் பாட்டெழுதி அவர்களை மலைக்க வைத்து வாய் பிளக்க வைப்பதுதான் நல்ல கவிஞனுக்கு அடையாளம் என்று பலரும் எண்ணி எழுதிக் கொண்டிருந்த சூழலில் , மலைக்க வைத்த கவிதைகளை மக்களுக்குப் புரிந்த வார்த்தைகளில் சொல்லி அவர்களையும் ரசிக்க வைப்பதில் மகுடம் சூடிய கவிஞன் கவியரசு கண்ணதாசன் .

கண்ணதாசன் பற்றி அதிகம் வெளியே தெரியாத பல அரிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் அவரது அண்ணனும் பிரபல படத் தயாரிப்பாளருமான ஏ எல் சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் .

" குப்பஞ் செட்டியார் மகன் நல்லாஞ் செட்டியார் . நல்லாஞ் செட்டியார் மகன் வெள்ளையப்பச் செட்டியார் . அவரது மகன் சாத்தப்பச் செட்டியார் . இந்த சாத்த்தப்பச் செட்டியாரின் பிள்ளைகள்தான் எனது மாமனார் ஏ எல் சீனிவாசன் அவர்களும் கவியரசு கண்ணதாசன் அவர்களும் . எனது கணவர் கண்ணப்பன் சீனிவாசனின் மகன் . எனவே கண்ணதாசன் எனக்கு சின்ன மாமனார் .

வெள்ளையப்பச் செட்டியார் அந்தக் காலத்திலேயே ஒரு பெரிய நூற்பாலை வைத்திருந்தவர் . ஆங்கிலேயர் காலத்திலேயே வெள்ளையப்பச் செட்டியாருக்காக ரயில் தினமும் சில நிமிடங்கள் நின்று போகுமாம் . இவர் அங்கு இருந்தபடி சென்னையில் உள்ள அயனாவரத்துக்கே உரிமைப்பட்டவராக இருந்தவராம் . அவருக்கு சென்னையில் ஜமீன்தார் என்றே பேராம்

கண்ணதாசனின் தந்தை சாத்தப்பச் செட்டியாரும் அப்படிதான் . அவர்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் ஊரில் எல்லோரும் வந்து சாப்பிட வேண்டும் என்று ஏற்பாடு செய்வார் . அதோடு நிற்காமல் நடந்து போய் ஊரில் யார் வீட்டிலாவது சமைக்கிற புகை வருகிறதா என்று பார்ப்பாராம் . யாரும் சமைத்தால் உரிமையாக கோபப் பட்டு அழைப்பாராம் . தவிர யாராவது " நாங்க சமைக்கல. குளிக்க வெந்நீர் போட்டிருக்கோம் என்று சொன்னால் அதை குறித்துக் கொண்டு அவர்கள் சொன்னது உணமைதானா என்று பார்தது அவர்கள் சாப்பிட வருகிறார்களா என்று கவனிப்பாராம் . அந்த அளவுக்கு விருந்தோம்பலில் சிகரம் தொட்டவர் அவர் .

பொதுவாக கவிதை எழுத நல்ல சூழல் இருந்தால் நல்லது என்பார்கள் . பசுமை . வயல் வரப்புகள் . நதி . தோப்பு . கூட்டம் கூட்டமாய் பறக்கும் பறவைகள் இவைகள் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள் அல்லவா? அது எதுவுமே இல்லாத ஊர்தான் கவிஞர் பிறந்த சிறுகூடற்பட்டி . வறண்ட செம்மண் பூமி . அங்கிருந்து அந்தக் கவியரசர் தோன்றியதுதான் நான் அவரிடம் வியக்கும் முதல் விஷயம் .

கண்ணதாசன் சின்ன வயதில் குடியிருந்த இடம் மிகப் பெரிய கூட்டுக் குடும்பம் . நான்கு மூலைகளிலும் நான்கு வீடுகள் இருக்க நான்கு வீட்டின் பின் புறங்களும் சந்திக்கும் படியாக ஒரு பெரிய முற்றம் இருக்கும் . அந்த இடத்தில் நான்கு வீட்டுக் காரர்களும் புழங்குவர் . நிறைய குழந்தைகள், பெண்கள் , சடங்குகள் , சம்பிரதாயங்கள் பார்தது வளர்ந்தவர் அவர் . திருமணங்கள் நடந்து கொண்டிருக்கும் . விதவிதமான பெயர் கொண்ட நகைகளின் புழக்கம் ஒரு பக்கம் . குழந்தைகள் பிறக்கும் .தாலாட்டுகள் ஒலிக்கும் .

பொதுவாக படைப்பாளிகள் படைப்புக்காக அனுபவங்களை தேடுவார்கள் என்று சொல்வார்கள் . ஆனால் மாமாவைப் பொறுத்தவரை அவர் கண்ணுக்கு முன்னாலேயே வாழ்க்கை அனுபவங்கள் சிறு வயதில் கிடைத்தன . அது பின்னாளில் அவரது பாடல்களில் வலிமையாக விளக்கமாக ஒலித்தன என்றால் மிகையாகாது .

மகனைப் பற்றி எல்லோரையும் விட அம்மாவுக்குத்தானே அதிகம் தெரியும் . கவிஞரைப் பற்றி சின்ன வயதில் அவர்கள் தாயார் " என் புள்ள வளந்த பின்னாடி ஆயிரம் பாட்டுக்கு அடி எடுத்துக் கொடுப்பான் " என்று சொல்லியிருக்கிறார் . அது போலவே கண்ணதாசன் பாடல்களால் உலகளந்தார் .

எனது மாமனார் சீனிவாசனுக்கு சின்ன வயதில் இரவு என்றால் பயமாம். ஆனால் அவரை விட இளையவரான கண்ணதாசன் கொஞ்சம் கூட பயமில்லாமல் இரவில் காடு மேடு எல்லாம் சுத்துவாராம் .
அதனால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் "பகலுக்கு ராஜா சீனிவாசன் . இரவுக்கு ராஜா முத்தையா " (கண்ணதாசனின் இயற்பெயர் ) என்பார்களாம்

இப்படியெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்த குடும்பம் ஒரு நிலையில் நொடித்தது . இப்போது சென்னையில் நியூ உட்லண்ட்ஸ் உள்ள இடத்தில் அப்போது முருகப்பச் செட்டியார் என்பவரின் வீடு இருந்தது . அங்கு இருந்தபடி அஜாக்ஸ் என்ற கம்பெனியில் சீனிவாசன் கணக்கேழுதுபவராகவும் கண்ணதாசன் ஒரு எளிய ஊழியராகவும் வேலைக்குப் போன கொடுமையும் நடந்தது .

பின்னாளில் அந்தக் கம்பெனி தங்கள் நிறுவனம் பற்றிய ஒரு வெளியீட்டில் இருவரது படத்தையும் போட்டு இவர்களை ஊழியர்களாகக் கொண்டிருந்த பெருமை பெற்ற கம்பெனி என்று மகிழ்ந்தது .
பிறகு ஒரு நிலையில் இருவரும் மீண்டும் ஊருக்கே போய் பின்னர் அங்கிருந்து கண்ணதாசன் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் பட நிறுவனத்துக்கும் சீனிவாசன் கோவை ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் வேலைக்குப் போனார்கள் .

என் மாமனார் சீனுவாசன் ஒரு பெரிய தயாரிப்பாளராகவும் சின்ன மாமனார் கண்ணதாசன் மாபெரும் கவிஞராகவும் உயர்ந்தார்கள் . பொதுவாக கவிஞர் ஆள் யார் என்று பார்க்காமல் எல்லோருக்கும் அற்புதமான பாட்டுக்கள் தருவார் என்றாலும் அண்ணன் படம் என்றால் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டு அற்புதமான பாடல்கள் தருவார் .

திருடாதே , சாந்தி , பெண் என்றால் பெண் , லக்ஷ்மி கல்யாணம் , பட்டணத்தில் பூதம் , சாரதா என்று எததனையோ படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம் .

அதுபோல தனிப்பட்ட அண்ணன் தம்பி பாசத்தில் உள்ள கொடுக்கல் வாங்கல் போக , எழுதும் ஒவ்வொரு பாட்டுக்கும் அப்போதே பாட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று கவிஞருக்கு கொடுத்து விடுவார் என் மாமனார் சீனிவாசன் .

இங்கு ஒரு செய்தி உண்டு . அதாவது ஒருமோரை கண்ணதாசன் தன் அண்ணனிடம் பண உதவி கேட்டதாகவும் அவர் மறுக்க அந்த விரக்தியில்தான் அண்ணன் என்னடா தம்பி என்னடா என்ற பாட்டை எழுதியதாகவும் கூறப் படும் தகவல்தான் அது .. ஆனால் அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது . அந்தப் பாட்டுக்கு ஒரு அரசியல் பின்னணி உண்டு என்றும் கூறக் கேட்டிருக்கிறேன் . ஒருவேளை அது உண்மையாக இருந்தாலும் கூட எதோ ஒரு சூழலில் பணமுடை காரணமாக என் மாமனார் மறுத்திருக்கலாம் . குழந்தையுள்ளம் கொண்ட கவிஞரும் ஒரு கவிஞனுக்கே உரிய குணத்தோடு அதைப் பாட்டாக வடித்திருக்கலாம் .
மற்றபடி அவர்கள் பாசமுள்ள அண்ணன் தம்பிகளாக இருந்ததற்கு பல உதாரணங்கள் கூற முடியும்.
என் மாமனார் தனது ஏ எல் எஸ் புரடக்ஷன்ஸ் மூலம் அகில இந்தியா முழுக்க வெற்றிக் கொடி நாட்டியவர் . பல வெற்றிகரமான இந்திப் படங்களைத் தயாரித்தவர் . அதனால் பல இந்திப் பட சூப்பர் ஸ்டார்களுக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர் . அவர்கள் எல்லோரும் என் மாமனாரை கிங் என்றுதான் செல்லமாக அழைப்பார்கள் .

ஒரு முறை சென்னை வந்த இந்தி நடிகர் திலீப் குமார் என் மாமனாரிடம் " கிங் ....இங்க கண்ணதாசன்னு ஒரு பெரிய கவிஞர் இருக்காரே .. அவரை நான் சந்திக்கணும் . நீங்கதான் ஏற்பாடு செய்யணும் " என்றுமிகுந்த ஆர்வத்தோடு கூற , எதுவுமே சொல்லாமல் ஏ எல் எஸ் கண்ணதாசனுக்கு போன் செய்து " தம்பி கொஞ்சம் வந்துட்டுப் போப்பா " என்று சொல்ல , அருகில் இருந்த கவிஞரும் உடனே சென்று விட்டார் .

அவ்வளவு சீக்கிரம் கவிஞர் வந்து விடுவார் என்று எதிர்பார்க்காத திலீப் குமார் என் மாமனாரைப் பார்தது வியந்து போய் "நீங்க கூப்பிட்டதும் கண்ணதாசனே உடனே வந்து விட்டாரே ." என்று கூற, என் மாமனார் அமைதியாக "கண்ணதாசன் என் உடன்பிறந்த தம்பிதான்" என்று கூறியிருக்கிறார் . வியப்பின் உச்சிக்கே போன திலீப் குமார் " கண்ணதாசன் உங்கள் உடன் பிறந்த தம்பிஎன்றால் நிஜமாகவே நீங்கள் கிங் தான் "என்று பாராட்ட சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்தது நெகிழ்ந்து நின்ற சம்பவமும் உண்டு .

அவ்வளவு ஏன்?

ஏ எல் சீனிவாசனின் மகனான என் கணவர் கண்ணப்பனும் நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் . இது கலப்புத் திருமணமும் கூட . இருவரது குடும்பத்துக்கும் தெரியாமல் நாங்கள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு நேராக கண்ணதாசனைப் பார்த்துதான் ஆசி வாங்கினோம் .

"சித்தப்பா எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க ' என்று என் கணவர் கேட்டதும் உடனே தயங்காமல் ஆசிர்வாதம் செய்த கவிஞர் நாங்கள் கிளம்பியதும் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? தன் அண்ணனுக்குப் போன் செய்து விசயத்தைச் சொன்னதுதான் !. என் மாமனார் எங்கள் திருமணத்தை அங்கீகரிக்க மறுக்க , கவிஞரோ அதன் பின் முழுக்க தனது அண்ணனுக்குதான் துணை நின்றார் . அந்த அளவு அண்ணன் பாசம் !

அது மட்டுமல்ல ! என் மாமனாரும் அவரது மனைவியும் பிரிந்து இருந்த சூழலில் மகனும் அண்ணன் மனது புண்படும்படி இப்படி ஒரு காரியம் செய்து விட்டானே என்ற வருத்தத்தில்தான் " கேளாய் மகனே ... கேளொரு வார்த்தை" என்ற பாடலையே எழுதினார் .

பின்னாளில் கவிஞரின் அன்பை நாங்கள் பெற்றோம் . என் திருமணத்தை அவர் எதிர்த்ததை நான் தவறாகவே நினைக்கவில்லை . இந்த உயரிய குடும்பத்துக்கு தகுதியான பெண்ணாக என் அன்பாலும் பாசத்தாலும் நான் மாறினேன் .

சிறு கூடற்பட்டியில் கவிஞர் பிறந்த வீடு பாழடைந்து கிடந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பே அந்த இடத்தில் என் கணவர் இருபது லட்சம் செலவில் பெரிய வீடு கட்டினார் . அப்போது கவிஞர் தவழ்ந்த அந்த வீட்டின் நடு மையத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மண்ணை எடுத்து சென்னை கொண்டுவந்தேன் . இப்போதும் அதை பொக்கிஷமாக வைத்திருக்கிறேன் .
என் மாமனார் இறந்தது அவரது ஐம்பத்தி நான்காம் வயதில் . கண்ணதாசன் இறந்ததும் அவரது ஐம்பத்தி நான்காம் வயதில்தான். தவிர சீனிவாசனின் மகள் அதாவது எனது நாத்தனார் ஒருவரும் அவரது ஐம்பத்து நான்காம் வயதில் இறந்தார் . இதோடு முடிந்ததா? என் கணவர் கண்ணப்பனும் தனது ஐம்பத்து நான்காம் வயதில்தான் இறந்தார் . இந்த விஷயம் உண்மையிலேயே சிலிர்க்க வைக்கிற ஒன்றாக இருக்கிறது .

வழக்கமாக வரும் கவிஞரின் பிறந்த நாட்களை விட இந்த வருடம் வரும் அவரது பிறந்தநாள் சிறப்பானது . ஏனெனில் இன்று அவரது பிறந்தநாள் மட்டுமல்ல . அவர் பிறந்த சிறு கூடற்பட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கோவிலில் கும்பாபிஷேகமும் இன்று நடக்கிறது . நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கும் தினம் நாங்கள் அந்த கும்பாபிஷேக விழாவில்தான் இருப்போம் .

இன்னொரு விஷயம் . கவியரசு கண்ணதாசன் பிறந்த இதே ஜூன் இருபத்திநான்காம் தேதிதான் நானும் பிறந்தேன் . அதில் எனக்கும் பெருமைதான் ' என்று சந்தோஷத்தில் முடித்தார் ஜெயந்தி கண்ணப்பன் .

Monday, June 21, 2010

# ராவணன் (படம்) துடைத்த கம்பனின் கண்ணீர்








ஒரு மண்ணில் காலகாலமாக வாழும் மக்கள் தமது நிறம் உயரம் போன்றவை குறித்தும் இயற்கைச் சூழலால் தமக்கு அமைந்த சில பழக்க வழக்கங்கள் குறித்தும் தம்மீது தாமே ஒரு வித தாழ்வு மனப்பான்மை கொண்டிருக்க , அங்கு புதிதாக வரும் இன்னொரு இனம் அந்த தாழ்வு மனப்பான்மையைப் பயன்படுத்தி, அந்த மண்ணிலேயே அந்த மக்களை அறிவு ரீதியாக அடக்கி, தாம் தாழ்த்தப் பட்டவர்கள்தான் என்று அந்த மக்களையே நம்பவைத்து சமூகத்தின் ஆட்சியைப் பிடிக்கிறது .

தவிர தம்மை உயர்ந்தவர்கள் என்றும் அந்த மக்களைத் தாழ்ந்தவர்கள் என்றும் விளக்கும்படியாக ஒரு சிறந்த கதைக் காவியத்தையும் படைத்து அந்தக் கதையின் நாயகனைக் கடவுளாகவும் ஆக்கி அந்த மக்களிடமே பரப்புகிறது . அரசியல் ரீதியாகவும் தன்னை பலப் படுத்திக் கொண்டு அந்தக் காவியத்தை அந்த மக்கள் சமூகத்திடமும் திணிக்க திட்டமிடுகிறது .

இப்படிப் பட்ட ஒரு சூழலில்தான் சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வான்மீகியின் ராமாயணத்தை தமிழில் காவியமாகப் பாட வேண்டிய சூழல் கவிச் சக்கரவர்த்தி கம்பனுக்கு அமைந்தது . 'நாம் பாடாவிட்டாலும் அதை ஒட்டக்கூத்தரோ அல்லது வேறு யாரோ தமிழில் படைக்கத்தான் போகின்றனர்' என்ற நிலையில் வான்மீகி ராமாயணக் 'கதை ' அப்படியே தமிழில் வந்தால் அது தமிழ்க் கலாச்சாரத்துக்கே மாபெரும் இழுக்காகி விடும் என்ற இக்கட்டில் கம்பன் தானே அந்தப் பொறுப்பை ஏற்றான் .

வான்மீகி ராமாயணத்தின் அழுக்குகளைக் கழுவி எல்லா பாத்திரங்களுக்கும் உயர்வு தந்து கம்பராமாயணத்தைப் படைத்தான் . பின்னர் கம்பராமாயணமே இந்தியாவெங்கும் பரவியது . ராமனின் புகழுக்கு பெரும் காரணமாக அமைந்தது

--- இவையெல்லாம் இலக்கியமும் வரலாறும் இணைந்து கூறும் தகவல்கள் .

ஆனாலும் தன் இனத்து அரசனை கெட்டவன் என்று சொல்லி வேற்று இனத்து நாயகனை உயர்ந்தவனாகக் காட்ட வேண்டியிருக்கிறதே என்ற கம்பனின் வலி கம்பராமாயணம் முழுக்க விரவிக் கிடப்பதை ஊன்றிப் படித்தால் உணர முடியும் . அதன் விளைவுதான் ராவணனுக்கு கம்பன் கொடுக்கும் மிக உயர்ந்த அறிமுகம். அது மட்டுமல்ல வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றதை அடுத்து வரும் பகுதிகளில் ராமனை கம்பன் நார் நாராக கிழித்துத் தொங்க விடுவதும் தாரை புலம்பறு படலத்தில் வாலியின் கால் தூசுக்குக் கூட ராமன் ஆக மாட்டான் என்ற தொனியைக் கொண்டு வந்திருப்பதும் கூட கம்பனின் அந்த வலியின் விளைவுகள்தான் .

இவற்றிலும் கூட திருப்தி அடையாமல் "நான் ராமாயணத்தை எழுதியதற்காக நாளை என் சமூகமே என்னைப் பழிக்கும் சூழல் கூட வரும் . ஆனால் உண்மை மீண்டும் வெல்லும். என்னைப் புரிந்து கொள்பவர்கள் தோன்றுவார்கள் " என்று கம்பனே ஒரு பாடலில் குறிப்பிட்டதாகக் கூட ஒரு தகவல் உண்டு .

அது உணமை எனில் கம்பன் சொன்ன அந்த மனிதன் சுமார் அம்பது வருடங்களுக்கு முன்பே தோன்றி நம்மிடையே மணியாக ரத்தினமாக நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் .

மணிரத்னம் .... அன்றைய கம்பனின் ஏக்கத்தை ஓர் ஆயிரம் ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தீர்த்து வைத்திருக்கிறார் இந்த மாபெரும் கலைஞன் .

அந்த விதத்தில் ராவணன், யுகங்களைக் கடந்த படம் !

அன்று சூழ்நிலைக் கைதியாக இருந்த காரணத்தால் கம்பன் எழுத முடியாமல் தவித்த உண்மையான ராமாயணத்தை இன்று செல்லுலாய்டில் கருத்தாண்மையோடு எழுதியிருக்கிறார் யுகங்களைக் கடக்கும் மணிரத்னம் என்ற இந்தக் கலைஞன் .

எப்படி தளபதி படம் மகாபாரதக் கர்ணன் கதையின் நவீன வடிவமோ அதுபோல ராவணன் படம் ராமாயணத்தின் நவீன வடிவம் . அப்படியே ராமாயணக் கதையாக இருந்திருந்தால் இது இன்னொரு வழக்கமான மணிரத்னம் படமாகவே இருந்திருக்கும் . ஆனால் ராமாயணத்தை நவீனமாக எழுதியது மட்டுமின்றி திருத்தியும் எழுதிய அந்த மாவீரத்தால் நூறு தலை கம்பீரத்தோடு ஜொலிக்கிறது இந்த ராவணன் .

மலைவாழ் மக்களில் ஒருவனாக--- (ஒரு பக்கம் கட்டைப் பஞ்சாயத்து செய்பவன் என்று வசனத்தில் கூறப் பட்டாலும் )---அந்த மக்களின் காவலனாக வாழும் நேர்மையான வீரமான முரட்டு ராவணன்தான் வீரய்யன் (விக்ரம்) . அந்த மனிதன், திடீரென்று டி எஸ் பி தேவ் என்ற ராமனின் (பிருத்வி ராஜ்) மனைவியான சீதை போன்ற ராகினியை (ஐஸ்வர்யா ராய்) கடத்திக் கொண்டு வந்து வனத்தில் (அசோக வனம்?) சிறை வைக்கிறான் . வீரைய்யனுக்கு ஒரு முரட்டு அண்ணன் சிங்கராசு (பிரபு)
வீரய்யனின் நிறம் , உடல் , காட்டுத்தனம் , தன்னைக் கடத்திய விதம் போன்றவற்றால் வீரய்யனை அசுர ராவணனாகவே பார்க்கிறாள் ராகினி ஒரு நிலையில் தன்னை ஏன் வீரைய்யன் கடத்தினான் என்ற உண்மை ராகினிக்கு தெரிய வருகிறது .

வீரய்யனின் தங்கை வெண்ணிலா (பிரியாமணி ) சூர்ப்பனகை போன்ற தைரியமான பெண் . ராமாயணக் கதையில் தன்னிடம் காதலைச் சொன்ன சூர்ப்பனகையை--- பிடிக்காவிட்டால் கண்ணியமாக ஒதுக்கியிருக்க வேண்டிய--- லக்ஷ்மணன் அவள் மூக்கறுத்து அநியாயமாக அசிங்கப்படுத்தினான் . இந்த ராவணன் படத்தில் வீரைய்யன் தன் தங்கைக்கான கல்யாண ஏற்பாட்டுக் கொண்டாட்டங்களில் இருக்கும்போது அவனைக் கைது செய்ய , டி எஸ் பி தேவ் தலைமையில் ஊடறுக்கும் போலீஸ் , ஒரு நிலையில் வீரைய்யன் தங்கை வெண்ணிலாவை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போகிறது . அங்கு எல்லா போலீசாரும் சேர்ந்து வெண்ணிலாவை சீரழிக்கின்றனர் . வெண்ணிலா தற்கொலை செய்து கொள்கிறாள் .

தங்கையை அவமானப்படுத்தியவன் வீட்டுப் பெண்ணை தூக்கி வந்து சிறை வைப்பதன் மூலம் , தமது குடும்பத்துப் பெண் அவமானப் படும்போது ஏற்படும் வலியை அவர்களும் உணரவேண்டும் என்பதற்காக, ராவணன் சீதையைக் கடத்தியது ராமாயணம் . தன் தங்கையின் அவலம் மற்றும் மரணத்துக்குக் காரணமான டிஎஸ்பி தேவ் வின் மனைவியைக் கடத்திப் பிரித்து வைப்பதன் மூலம் , தான் அனுபவித்த வலியில் கால்பகுதியையாவது தேவுக்குத் தரவேண்டும் என்பது வீரய்யனின் எண்ணம் .

ஆனால் அங்கு ராவணனுக்கு நிகழ்ந்த எதிர்பாராத அதே சலனம் இங்கு வீரய்யனுக்கும் . ஆம் ! அழகி(ய)ல் மயக்கம் . அடுத்து காதல் .

மனைவியைத் தேடி தேவ் (அரசாங்கப் ) படை பலத்தோடு காட்டுக்கு வருகிறான் .

காட்டின் சகல ஏரியாக்களையும் அறிந்த--- குரங்கு போல மரம் பாறை எல்லாம் தாவித்தாவி ஏறும் திறன் வாய்ந்த--- ஒரு வன ஊழியர் (கார்த்திக்) தேவுக்கு துணை வருகிறார் (அனுமன் போல் என்பதை சொல்லவும் வேண்டுமோ?)

பிரச்னை வெடிக்கிறது . ராமாயணத்தில் ராமனின் தம்பி விபீஷணன் ராமனின் படைபலத்தைப பற்றி ராவணனிடம் சொல்லி சமாதானமாகப் போகலாம் என்கிறான் . இங்கும் வீரய்யனுக்கு அப்படி ஒரு (பிளஸ் டூ வரை படித்த) தம்பி . அந்த ராமனாவது விபீடணனை ஏற்றான் . ஆனால் இந்த நவீன ராம(தேவ)ன் வீரய்யனின் தம்பியை கொடூரமாக சுட்டுப் பொசுக்குகிறான் .

தன் கணவனை விட வீரய்யன் உண்மையில் நல்லவன் என்பதை உணர்ந்த ராகினி வீரய்யனின் காதலை ஏற்கும் மனநிலைக்கு வருகிறாள். பதிலாக தன் கணவனை உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தக் கூடாது என்று மட்டும் வீரய்யனிடம் கேட்கிறாள் .

ஒரு நிலையில் வீரய்யனும் தேவும் இரு மலை முகடுகளுக்கு இடையேயான ஒரு பெரிய மரப் பாலத்தில் மோதுகிறார்கள் . எப்படியாவது வீரய்யனைக் கொல்லவேண்டும் என்று தேவ் முயல . மாறாக தேவ் வைக் கொல்ல வாய்ப்பு வந்தும் , ராகினிக்கு கொடுத்த வாக்குக்காக தேவுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறான் வீரய்யன் .

ராகினியையும் கணவனோடு அனுப்பியும் வைக்கிறான் .

வீரய்யன் நடந்து கொண்ட விதம் பற்றி ராகினியிடம் தேவ் கேட்க, ராகினி வீரய்யன் பற்றி மிக உயர்வாக சொல்ல, மனைவியையே சந்தேகப் படுகிறான் தேவ் இனி தேவுடன் வாழ்வதை விட , காதலை மட்டும் சொல்லியபடி, வாய்ப்பிருந்தும் விரல் கூட படாமல் வைத்திருந்த வீரய்யனுடன் இருப்பதே மேல் என்ற உணர்வுடன் அவனைத் தேடி வருகிறாள் ராகினி .

காதலை மனம் திறந்த நெகிழ்வோடு பரிமாறும் தருணம் , பெரும் படையுடன் வரும் தேவ் வீரய்யனை சுட்டுக் கொள்ள முயல்கிறான் . துப்பாக்கி குண்டு சீறி வரும் தருணம் வீரய்யனைக் காப்பாற்றி துப்பாக்கிக் குண்டை தான் வாங்க ராகினி முயல, அவளைக் காப்பாற்றி எல்லாக் குண்டுகளையும் தன் மீது வாங்கிக் கொண்டு,

நல்ல காதலனாய் காவலனாய் தலைவனாய் ஆண்மகனாய் மாவீரனாய் சொல்லப் போனால் நிஜமான அவதார புருஷனாய் மரணம் அடைகிறான் வீரய்ய ராவணன் .

இப்படி முழுக்கதையையும் தெரிந்து கொண்டு பார்த்தால் கூட எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஒரு அற்புதமான படம் ராவணன் . சொல்லப்போனால் இந்தப் படத்தில் இவ்வளவு விஷயம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு பார்த்தால் இன்னும் கூட ஆழமாக மணியான இரத்தின உணர்வுகளை ரசிக்க முடியும் . கம்பநாடன் எழுத முடியாமல் விட்டு விட்டுப் போன கண்ணீர்த் துளிகளை மையாக ஊற்றி கடைசிக் காட்சிகளை எழுதியிருக்கிறார் மணிரத்னம் .

வழுக்கும் ஆபத்தான பாறையில் வழுக்கிச் சறுக்கியபடி விக்ரம் பாய்ந்து வருவது , உச்சியில் இருந்து குதிக்கும் ஐந்வர்ய்ச்ஸ் ராய் மரத்தில் தொங்கி கிளை உடைந்து பாய்ந்து சுழன்றுஅருவி நீரில் விழுவது , பின்னர் இருவரும் நீர்ச் சிதறல் விளையாடும் வழுக்குப் பாறையில் விழுதுகளைப் பிடித்தபடி ஏறுவது போன்ற காட்சிகள் நாம் பார்ப்பது சினிமாதான அல்லது நாமும் காட்டுக்குள் நின்றபடி பார்க்கும் நிஜக் காட்சிகளா என்ற பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன .

விகரம் .. உங்களைப் பாராட்ட தமிழில் கூடப் போதுமான வார்த்தைகள் இல்லை . பக் பக் சொல்லி கழுத்தைக் குலுக்கி தலையை உலுக்கி தட்டிக் கொண்டு கம்பீரப் புன்னகையோடு கண்களை விரிக்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் ஒற்றைத் தலையின் பக்கவாட்டில் பத்துத் தலைகள் முளைப்பதை மானசீகமாக உணரமுடிகிறது .

முழு முகம் மறைக்கும் மேக்கப்பில் கண்களை சிமிட்டியபடி சுருதி விலகிய ராகத்தில் பேசிய சீதைகளையே இதுவரை சினிமாவில் பார்த்த நமக்கு நிஜ சீதையின் உணர்வுகளின் அருவியாக பிரமிக்க வைக்கிறார் ஐஸ்வர்யாராய் .

லொக்கேஷன்கள் , சந்தோஷ் சிவன் மணிகண்டன் இவர்களது ஒளிப்பதிவு சமீர்சந்தாவின் கலை இயக்கம் இவை மணிரத்னத்தின் படைப்பாற்றலோடு இணைந்து தொழில்நுட்ப ரீதியாக அசுர பலம் கொண்ட படமாக ராவணனை மாற்றியுள்ளன . பெரிதாக ஏமாற்றியது ஏ ஆர் ரகுமான் . (ஏன், ரகுமான் ? ஏன் ?)

"சோத்துல பங்கு கேட்டா எலையப் போடு ; சொத்துல பங்கு கேட்டா தலையப் போடு " என்கிறார் வைரமுத்து . காட்டில் வாழும் அந்த இயற்கை மனிதர்களுக்கு சொத்தே சோத்துக்காகத்தானே கவிஞரே !

பிரியாமணியின் பிளாஷ்பேக் காட்சிகளில் துவங்கி கடைசி வரை வசனங்களால் அசத்தியிருக்கிறார் சுஹாசனி மணிரத்னம் .
படத்தின் முதல் பகுதி, சற்று இறங்கி, கதையிலும் பாய்வு இல்லாமல் கொஞ்சம் பயமுறுத்தியது நிஜம் ஆனால் இரண்டாம் பகுதியில் எல்லா விதங்களிலும் மகுடம் தொட்டுவிட்டார் மணிரத்னம் .

அந்த தொங்குபால சண்டைக் காட்சி பிரம்மாண்ட பிரம்மாதம் .

தான் கிடைத்த பின்னும் வீரய்யனைக் கொல்லத் துடிக்கிற கணவனைப் பார்தது " நீங்க தேடி வந்தது என்னையா? இல்லை அவரையா?" என்று ராகினி கேட்கும் இடம் திரைக்கதையின் சிகரம் என்றால் ....

வீரய்யன் ராகினி இருவரின் தனித்தையான புன்னகைக்கும் புகைப் படங்களை வேகமாக (தேவ சுழற்றுவது போல ) சுழற்றிக் காட்டி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்பது போல தேவ் உணர அதன் மூலம் அவன் தன் மனைவியை சந்தேகப் படுகிறான் என்பதற்கான முன்னோட்டத்தை அழுத்தப்படுத்தயிருக்கும் உத்தி டைரக்ஷனின் உச்சம் .

மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படம் வெளிவந்த போது, சில பல காரணங்களுக்காக, சொல்ல வந்த கதைக்கு எதிராகவே சிலகாட்சிகளை மணிரத்னம் வைத்தார் என்று விமர்சனங்கள் எழுந்தது உண்டு . ஆனால் இந்தப் படத்தில் அப்படி எதுவுமே சொல்ல முடியாத அளவுக்கு ----எந்த விஷயத்திற்காகவும் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் ---சொல்ல விரும்பிய கதையை நூறு சதவீத துணிச்சலோடு சொல்லியிருக்கும் விதத்தில்

திரையுலகின் சுப்ரமணிய பாரதியாக உயர்ந்து நிற்கிறார் மணிரத்னம் . பாஞ்சாலி சபதம் எழுதிய பாரதி ஒரு வேளை சீதையின் கேள்விகள் என்று எதுவும் எழுதி இருந்தால் இப்படித்தான் எழுதி இருப்பான் .

வீரா சுடப் பட்டு ராகினியைப் பார்த்தபடியே பாதாளத்தை நோக்கிப் பயணிக்கும் போது காற்றும் ஒலியும் கசியும் ஆன்மாவின் நடுக்கமுமாக ராகினி வீரா என்று அழைப்பது, யுகயுகமாக அடக்கி வைக்கப் பட்டு திடீரென வெளிப்பட்ட சீதையின் குரலாகவே ஒலிக்கிறது .

வெகு ஜன மக்கள் பார்க்கும் திரையரங்கில் நாம் இந்தப் படத்தைப் பார்த்தபோது படம் முடிந்த பின்பு அவர்கள் முகத்தில் நாம் பார்க்க முடிகிற--- உறைந்து கிடக்கும் அந்த பிரம்மிப்புதான் மணிரத்னத்திற்குக் கிடைத்திருக்கும் முதல் விருது .

மணிரத்னத்திற்கு இந்த அற்புத தருணத்தில் ஒரு வேண்டுகோள் . கர்ணன் கதையில் இருந்து தளபதி எடுத்தது உங்களின் சாதனையல்ல . அது ஒரு நிகழ்வு . ஆனால் ராமாயணத்தில் இருந்து வந்துள்ள ராவணன் உங்கள் சாதனை. ஆனால் இதை விட உங்களுக்கு முக்கியமாக இன்னொரு கடமை இருக்கிறது .

சிலப்பதிகாரத்தை நீங்கள் முழுமையாக உள்வாங்கி உங்கள் பாணியில் ஒரு படமாக எடுக்க வேண்டும் . இந்தக் கதைகளை விட உங்களுக்கு அது பிரம்மாதமாக கைவரப் பெறும் என்பதற்கு அடையாளம்தான் உங்களது மறக்க முடியாத மௌனராகம் படம் .

உங்களது இன்றைய திரைக்கதை மற்றும் தொழில்நுட்பத் திறமையில் சிலப்பதிகாரம் படமாக வெளிவந்தால் .....
என்றென்றும் உலகின் சிறந்த பத்துப் படங்களில் ஒன்றாக --- மாற்ற முடியாத சாதனையாக மாறி, அது உங்களின் நிரந்தரமான சரித்திரமாகவே அமையும் . அவசியம் செய்யுங்கள்

இராவணன் ---- மணியான ரத்னமான அவதாரம் !


Wednesday, June 9, 2010

# ஈழத் தமிழனைக் கேவலப் படுத்தும் மலையாளப் படம்







சுரேஷ் கோபி என்ற மலையாள நடிகர் கதாநாயகனாக நடிக்க முகமது ரபி என்பவரின் தயாரிப்பில் பிஜு வட்டப்பாரா என்பவர் இயக்கிய ராம ராவணன் என்ற மலையாளப் படத்தைப் பார்க்க, சென்னையில்ஓர் அழைப்பு வந்தது . 'என்னடா இது திடீரென எலி சட்டை போட்டுக் கொண்டு வருகிறது என்றஎண்ணத்தில் போனால் .....

ரத்தம் கொதித்தது !

மலையாள எழுத்தாளர் மாதவி குட்டி என்கிற கமலாதாஸ் என்கிற கமலா சுரையா என்பவர் பலப்பல வருடங்களுக்கு முன்பு எப்போதோ எழுதிய ஒரு நாவலைத் தழுவி எடுக்கப் பட்டிருந்த அந்தப் படம் இலங்கையில் ஈழத் தமிழர் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது . ஆனால் அடிப்படையையே தகர்க்கிற அராஜகம் !

எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல , வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போல , கண் பார்வை மங்கியவனின் கண்களைப் பிடுங்கி அரைகுறைப் பார்வையையும் அழிப்பது போல , ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் ஈழத் தமிழர்களின் வாழ்வையும் கேவலமாகச் சொல்லி, தமிழ் நாட்டுத் தமிழர்களையும் அசிங்கப் படுத்தி அவமானப் படுத்தி , போராளிகளைப் பயங்கரவாதிகளாக கோழைகளாக சுயநலவாதிகளாகச் சித்தரித்த அந்தப் படம் நம்மை நிலை குலைய வைத்தது .

இதை எல்லாம் விட முக்கியமாக சிங்களர்கள் நல்லவர்கள், அன்பானவர்கள், புத்தனின் வழி வந்தவர்கள் , தியாக சீலர்கள் , பற்றற்றவர்கள் , என்று மீண்டும் மீண்டும் கூறி தமிழர்களின் போராட்டம் காட்டுத் தனமானது என்று பச்சைப் பொய் சொல்கிறது .அது மட்டுமல்ல இலங்கையில் உள்ள தமிழன் எல்லாம் இங்கிருந்து பிழைக்கப் போனவன்தான் . இலங்கை அவ்னது சொந்த மண் இல்லை என்று மறைமுகமாக பசப்ப முயல்வதோடு இந்திய தேசத்தில் தமிழனுக்கு (தாயகத் தமிழனையும் சேர்த்து )உள்ள உரிமையை விட தமிழ் நாட்டிலே கூட சிங்களனுக்கு அதிக உரிமை உண்டு என்று பிதற்றுகிறார்கள் இந்த படத்தை எடுத்தவர்கள். .

தண்ணீர் விசயத்தில் தமிழனை ஏமாற்றுவது போதாதா? ரத்த விஷயத்திலும் ஏமாற்ற வேண்டுமா? அடப் பாவிகளா!

படத்தில் சொல்லப் படும் கதையைப் பார்த்தாலே எப்பேர்ப்பட்ட வஞ்சகம் இந்தப் படம் என்பது புரியும் . இவர்கள் இந்தப் படத்தை பிலிமில் எடுத்தார்களா இல்லை அயோக்கியத்தனத்தில் எடுத்து அக்கிரமத்தில் பிரதியிட்டார்களா என்ற ஆத்திரம் எழும் .

இவர்கள் சொல்லியிருக்கும் -- இல்லையில்லை விட்டிருக்கும் கதையைப் பாருங்கள்.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழன் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்குப் பிழைக்கப் போனானாம் . அவன் பெயர் அண்ணாதுரை . அங்கு ஒரு சிங்களவன் அந்தத் தமிழனுக்கு வாழ்க்கை அளித்து வசதி செய்து கொடுத்து , வியாபாரம் செய்ய வைத்து பணக்காரனாக வாழ விட்டானாம் . எப்படி இருக்கு?

(கொழும்பு வீதிகளில் தமிழனை அநியாயமாக அடித்துக் கொன்ற சூழலில் சில மனிதாபிமான சிங்களர்கள் தற்காலிக தமிழர்கக்ளுக்கு அபயம் கொடுத்திருக்கிறார்கள் மறுக்கவில்லை . ஆனால் வாழ்வளித்ததாக எல்லாம் கூறுவதைப் பார்த்தால் .... அய்யகோ!.

பிறகு அந்த சிங்களவன் மகள் -- ஒரு சிறுமி -- அடிக்கடி தமிழகம் வருவதும் உண்டாம் . தமிழகத்தில் உள்ள அண்ணாதுரையின் கிராமத்து வீட்டில் அண்ணாதுரையின் பிள்ளைகளோடு தாயாய்ப் பிள்ளையாய் பழகுவது உண்டாம்


சிங்களவனால் ஓகோவென்று வாழ்ந்த தமிழன் தமிழகம் வந்து சிங்களவன் கொடுத்த காசால் இங்கு நன்றாக வாழ்கிறானாம் . (இந்த காட்சி யோசிக்கும்போதுதான் ஒருவேளை சம்மந்தப் பட்ட நபர்களுக்கு இப்படி ஒரு படம் எடுக்க சிங்களவன் பொட்டி கொடுத்திருப்பானோ? )

இரண்டு குடும்பங்களுக்கு இடையே கடிதப் போக்குவரத்து எல்லாம் இருக்கிறதாம் . ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருக்கிறார்களாம் (எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ? )

இந்த நிலையில் அந்த அன்பான சிங்களவனை இலங்கையில் ஆயுதம் ஏந்திப் போராடும் தமிழ்ப் போராளிகள் அநியாயமாக கொன்று விடுகின்றனராம் கொன்றவர்களில் ஒருவன் தான் திருச்செல்வம் . கதாநாயகன் .

திருச்செல்வம் ஒரு நிலையில் திருட்டுத்தனமாக தமிழகம் தப்பி வந்து விடுகிறானாம் . அவனது சில போராளி நண்பர்களும் இங்கே இருக்கின்றனராம் . அவர்களுக்கு அண்ணாதுரையின் பிள்ளைகள் உதவுகின்றனர் . ஒரு காலத்தில் அண்ணாதுரை குடும்பத்தோடு வாழ்ந்த‍‍‍‍‍‍‍, இப்போது சிதலமாக இருக்கிற வீட்டில் திருச்செல்வத்தைத் தங்க வைக்கின்றனர் .

அங்கே இலங்கையில், செத்துப் போன சிங்களவனின் மகள் மனோமி யாருமல்லாத அனாதையாகி விடுகிறாளாம் . அவளைக் காப்பாற்ற யாருமே இல்லையாம்

அந்தப் பெண் பிழைக்க வழியின்றி தமிழ்நாட்டில் உள்ள அண்ணா துரையிடம் அடைக்கலம் தேடி வந்து காப்பாற்ற சொல்லி இறைஞ்சுகிறாளாம். அவரும் ரொம்ப நல்லவராம் . அன்போடு ஏற்கிறாராம்.

ஆனால் அவரது மகன்கள் மகள்கள் எல்லோரும் ஒரு சிங்களப் பெண்ணை ஏற்க முடியாது என்று கல் மனசோடு கூறுகின்றனர்களாம் . அவர்கள் கெட்டவர்களாம் .


இந்நிலையில் அண்ணாதுரையின் பழைய வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் திருச்செல்வத்தை மனோமி பார்தது விடுகிறாள் . தன் தந்தையை கொன்றவன் என்பதைத் தெரிந்தும் அவனை மன்னித்து காதல் கொள்கிறாளாம் அவ்வளவு நல்லவளாம் அவள்

சரி திருச்செல்வம் யார் தெரியுமா ? கவிஞர் கண்ணதாசன் போல கவிஞராக ஆக வேண்டும் என்று ஆசைப் பட்டு பின்பு தவறான வழியில் போய் பயங்கரவாதியானவனாம் . தமிழகத்தில் இருந்து இலங்கை சென்று பயங்கரவாதத்தில் ஈடுபட்டவனாம்

(இப்படி சொல்வதன் மூலம் இலங்கையில் விடுதலைக்காகப் போராடுகிற எல்லோரும் தமிழ்நாட்டில் இருந்து போனவர்கள்தான் அந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் அல்ல என்று கதை விட்டிருக்கும் இவர்களை என்ன செய்தால் தகும்? )

அதுவும் பெற்ற தாயைக் கண்டு கொள்ளாமல் பரிதவிக்க விட்டு விட்டு இலங்கை சென்று பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு இப்போது மீண்டும் தமிழகம் வந்து மறைந்து வாழ்பவனாம் திருச்செல்வம் அப்படிப்பட்ட திருச்செல்வத்தால் தனது தந்தையே கொல்லப் பட்ட போதும் அவனை மன்னித்து காதலிக்கிறாளாம் அந்த சிங்களத்தி . அது மட்டுமல்ல சிங்கள நாட்டில் புத்தன் பற்றி எழுதப்ப பட்ட பல நூல்களைக் கொடுத்து அவனைப் படிக்கச் சொல்லி "அன்பு பாசம் மனிதாபிமானம் மனித நேயம் எல்லாம் என்ன என்று எங்களைப் பார்த்துப் புரிந்து கொள்" என்கிறாள்

மனோமியே திருச்செல்வத்துக்கு வாழ்வு கொடுக்க முனைந்தும் அண்ணாதுரை மறுக்கிறாராம் . "அவன் பயங்கரவாதி அவனுக்கு உன்னை கல்யாணம் செய்து கொடுக்க மாட்டேன்" என்கிறாராம்

அதே நேரம் அண்ணாதுரையின் பிள்ளைகள் மனோமியை ஏற்காததால் அவள் மனம் குமைந்து அண்ணாதுரை வீட்டில் இருந்து வெளியேறுகிறாளாம் . அதில் மனம் நொந்த அண்ணாதுரை தன் பிள்ளைகளுக்கு சொத்தில் எந்தப் பங்கும் தராமல் பணத்தை வைத்து முதியோர் இல்லம் வைத்து விடுகிறாராம் .


இதற்கிடையில் போராளியாக இருந்து விட்டு இப்படி காதல் என்று போகலாமா எனக் கேட்கும் மற்ற போராளிகள் கெட்டவர்களாம். உடனே அவர்களுக்குள் அடித்துக் கொள்வார்களாம் . உடனே திருச்செல்வம் "நீங்க ரொம்ப காட்டுத்தனமா இருக்கீங்க , உங்க சித்தாந்தம் காட்டுத்தனமா இருக்கு" என்று அவர்களோடு சண்டையிடுகிறான் .

போலீஸ் திருச்செல்வத்தை நெருங்க திருச்செல்வம் தப்பி ஓடுகிறான் . அவன் தாயை மீண்டும் சந்திக்கிறான் , அங்கு பார்த்தால் ... தமிழ்ப் போராளியான திருச்செல்வத்தின் தாய்க்கு பணிவிடை செய்து கொண்டு அங்கு உத்தமி போல வாழ்வது சிங்களப்பெண் மனோமியாம் (எப்பூஊஊஉடி?)

திருச்செல்வத்தின் தாயே தன் மகனிடம்" நீ மனோமியோடு போய் எங்காவது வாழ்" என்று அனுப்ப, திருச்செல்வம் மனோமியோடு போலீசுக்கு பயந்து திருட்டுத்தனமாக ஓட இதுவரை அடைகலம் கொடுத்த போராளிப் பெண்ணே அநியாயமாக திருச்செல்வத்தை சுட்டு வீழ்த்துகிறாளாம்.

சிங்களப் பெண் மனோமி அவனுக்காக கண்ணீர் விடுகிறாளாம்


இந்தப் பைத்தியக்காரப் படம்தான் ராம ராவணன் .

என்ன ஒரு அற்பத்தனம் பாருங்கள் . !

படத்தில் போர்க்களமாகக் காட்டப் படும் ஒரே காட்சி எது தெரியுமா? தமிழ்ப் போராளிகள் சிங்களனை கொல்வது அதுவும் 'அநியாயமாக'க் கொல்வதுதான் .மற்றபடி சிங்களவனுக்கு எறும்புக்குக்
கூட துன்பம் இழைக்கத் தெரியாதாம் . போங்கடாங் ......! போராளிகள் எந்த அப்பாவி சிங்களனையாவது கொன்றதாக வரலாறு உண்டா? அப்படி அவர்கள் நினைத்திருந்தால் இலங்கையில் எத்தனையோ லட்சம் சிங்க‌ளனைக் கொன்றிருக்க முடியுமே !

இதைவிடக் கொடுமை என்னவென்றால் ஆடு திருடி அகப்பட்டவன் அடிக்கடி "நான் திருடல... திருடல...." என்று செயற்கையாக முனகுவதுபோல கதாநாயகி அடிக்கடி "நான் அன்பை போதித்த புத்தனின் மகள் " என்று உளறிக் கொண்டே இருக்கிறாள் .
இன்று சிங்கள புத்த்ர்களிடம் அன்பு இருக்கிறது என்று வாதிடுபவன் எவ்வளவு பெரிய மடையனாக மக்கட்டையாக மரமண்டையாக இருக்கமுடியும் .? இந்த படம் எடுத்தவர்களும் அந்த வரிசையில் !.

ஒரு காட்சியில் ஈழத் தமிழர்கள் எல்லாரும் வெறும் சாப்பாட்டு ராமர்கள் எனபது போல ஒரு அற்ப சிந்தையில் விளைந்த காட்சி .


தவிர அந்த சிஙகளப் பெண் தமிழக கிராமத்திலே இஷ்டம் போல சுத்தி வருவாளாம் . அவளை மற்ற தமிழ்ப் பெண்கள் எல்லோரும் "நீதான் எங்க அண்ணாதுரை அய்யா தத்தெடுத்து வளர்க்கிற சிங்களப் பெண்ணா . நல்லா இரும்மா" என்று வாழ்த்தும் ரீதியில் பேசுவார்களாம் . இது போல தமிழகத்தின் எந்த கிராமத்திலாவது இதுவரை ஒரு சம்பவம் நடந்ததாக படம் எடுத்த பக்கிரிகள் காட்ட முடியுமா?


படம் முழுக்க போராளிகளை டெரரிஸ்ட் .. டெரரிஸ்ட் என்று தேவை இல்லாத இடங்களில் எல்லாம் அந்த வார்த்தையைத் திணித்து வசனம் வருகிறது . (படத்தில் பல வசனங்கள் தமிழிலேயே வருகின்றன.) ஒருவேளை கேரளாவில் இருந்து காஷ்மீர் தீவிரவாதத்துக்கு ஆள் அனுப்புகிறவர்களை நினைத்துக் கொண்டு எழுதினார்களோ என்னவோ .


பெற்ற தாயை பரிதவிக்க விடுபவன் போராளி என்று ஒரு சரடு விட்டிருக்கிறார்களே ... அடச்சீ !

பெற்ற தாய், உடன்பிறந்த சகோதரி , , கட்டிய மனைவி இவர்கள் தமது கண் முன்னாலேயே சீரழிக்கப் படுவது கண்டு பொங்கி ஆயுதம் எடுத்தவன்தான் போராளி . டெல்லியில் காரியம் சாதிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ப‌வர்களுக்கு அது எப்படி தெரியும்?

இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரும் தமிழகத்தில் இருந்து போனவர்கள்தான் என்று ஒரு தொனி படத்தில் வருகிறது . உலக வரை படத்தை வரைந்த டாலமியே இலங்கையில் தமிழர்கள் இருந்ததாகத்தான் குறிப்பிட்டுள்ளார் . அதற்குப் பின்பு அங்கு உருவான இனம்தான் சிங்கள இனம் .

மாதவிகுட்டி நாவலை எழுதிய காலகட்டம் வேறு . அப்போது ஒரு வித்தியாசமான கதை முயற்சியில் அவர் இப்படி கற்பனையாக எதையோ உளறி எழுதி விட்டுப் போயிருக்கலாம் .

ஆனால் இப்போது ஓர் இனம் தன் சொந்த மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப் பட்டு அநியாயமாக அழிக்கப் பட்ட ரத்தக் கறை இன்னும் காய்வதற்குள் இப்படி ஒரு தவறான வரலாற்றை சொல்ல---- அநியாய ஆலாபன செய்ய‍‍‍ இவர்களுக்கு மனது வருகிறது என்றால் ......புரிகிறது!

இந்தியாவில் ‍‍, தென்னிந்தியாவில், தவறான அரசியல் போக்காக தமிழனை வெறுப்பவர்கள் கூட , இலங்கையில் தமிழினத்துக்கு நடக்கும் கொடுமைகளை எண்ணி உள்ளம் கசிகிற வேளையில், அவர்கள் மனதிலும் பொய்யை விதைத்து புளுகை வளர்த்து மேலும் தமிழனுக்கு எதிரான முட்டாள்தனமான கருத்தியலை வளர்க்க.... இலங்கை அரசு செய்யும் சதிக்கு சோரம் போன சிலரின் செயலே இது .

தவிர தமிழ்நாட்டிலும் விவரம் புரியாதவர் மனதில் விஷம் தூவலாமே !

இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் , வெளியுறவுத் துறைச் செயலர் , ஐ நா.வின் பான் கி மூனின் உதவியாளர் , இலங்கையின் ராணுவ ஆலோசகர் என்று நான்கு பதவிகளிலும் ஒரே நேரத்தில் உட்கார்ந்து கொண்டு ஈழத் தமிழர்களைக் கருவறுத்த பின்பு படம் எடுத்து பசப்புவதா கஷ்டம்?

மனசாட்சியுள்ள மலையாளிகளுக்கு ஒரு கேள்வி .

இலங்கைப் பிரச்னை என்பது சிங்களனுக்கும் மலையாளிக்குமான பிரச்னையாக இருந்திருந்தால் இப்படி ஒரு படத்தை நீங்கள் எடுப்பீர்களா? மனமுள்ளவர்கள் பதில் சொல்லட்டும் .


இது இப்படி இருக்க , படத்தின் அறிமுகக் காட்சியில் கலந்து கொண்ட நடிகர் சுரேஷ்கோபி "ஒரு தமிழன் எடுக்க வேண்டிய படத்தை மலையாளிகளாக நாங்கள் எடுத்திருக்கிறோம் " என்று உளறியது கொடுமையின் உச்ச கட்டம் .

சுரேஷ்கோபி !

தமிழன் உப்புப் போட்டு சோறு தின்பவன் சுரேஷ் கோபி . இன்னும் எத்தனை துரோகங்கள் துரோகிகள் இங்கு இருந்தாலும் மற்றவர்கள் அளவுக்கு தமிழன் சோரம் போகமாட்டான் .


இன்னும் கேரளாவில் கூட திரையிடப் படாத -- இப்படிப்பட்ட ஒரு ---கேவலமான --தமிழின விரோத --அற்பத்தனமான-- படத்தை ‍‍‍ திட்டமிட்டு --தமிழ்நாட்டில் கொண்டு வந்து இங்கு போட்டுக் காட்டுகிறார்கள் என்றால் என்ன ஆணவம் ? இது யார் கொடுத்த தைரியம்? யாரை ஆழம் பார்க்கும் செயல் ?


ஒன்று உறுதி !
இந்தப் படம் தமிழ்நாட்டில் ஒரு திரையரங்கில் திரையிடப் பட்டால் கூட அது கேவலம் .

அதோடு கேரளா உட்பட உலகின் எந்த மூலையில் இப்படம் திரையிடப் பட்டாலும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டியது தமிழனின் கடமை மட்டுமல்ல .

நாகரீகம் உள்ள -- தன் வீட்டுப் பெண்களை மானத்துடன் வளர்க்க விரும்புகிற ‍‍ ஒவ்வொரு நல்ல மனிதனின் கடமை கூட !

Monday, June 7, 2010

#பெண்சிங்கம் -- கலைஞரின் விமர்சனம்




நமது சு.செந்தில்குமரனார் வலைப் பூவிலே , பெண் சிங்கம் படத்து விமர்சனத்தை கண்ணுற்று ஆவலோடு படிக்கத் துவங்கியிருக்கும் திரைப்படக் கலைஞர்களே! விமர்சக நெஞ்சங்களே ! தோழமை வலைப் பூவர்களே ! மற்றும் எனது உயிரினும் மேலான அன்பு ரசிகப் பிறப்புக்களே!
வணக்கம் !
டாக்டர் கலைஞர் அவர்களின் கதை திரைக்கதை வசனத்தில் உருவாகி வெளிவந்திருக்கும் பெண்சிங்கம் படத்தை காண்கிற வாய்ப்பு எனக்கு அமைந்தது . அதை வாய்ப்பு என்று சொல்வதை விட , சூழல் என்று சொல்வது சாலப் பொருத்தம் என்று நினைக்கிறேன் . எனவே அதையே நான் குறிப்பிடுகிறேன் .

பாலி ஸ்ரீரெங்கம் இயக்க உதய்கிரண் என்ற தெலுங்கு நடிகர் , மீரா ஜாஸ்மின் என்ற மலையாள நடிகை மற்றும் ரிச்சர்டு என்ற மலையாள நடிகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரம் ஏற்று முத்தமிழ் அறிஞரின் வசனத்தை பேசி இருக்கிறார்கள் . அம்மாவோ! தமிழர் யாருக்கும் நாயக நாயகி கதாபாத்திரம் தராத இதுவன்றோ திராவிடத் திரைப்படம் . எண்ண எண்ண இதயம் பூரிக்கின்றது .

வனத்துறை அதிகாரியாக பணியாற்றும் இளைஞன் சூர்யா . அவனுக்கும் அவனது அலுவலகத்திலே கணிப்பொறியாளராகப் பணியாற்றும் இளம் பெண்ணுக்கும் தமிழ்த் திரையுலக விதிகளை முன்னிட்டு உடனடிக் காதல் வருகிறது . இந்திய ஆட்சிப் பணிக்கான கல்வி கற்க ஆசைப் படும் அந்தப் பெண்ணோ தனது குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் காரணமாக அல்லலுற, படிப்புச் செலவை சூர்யாவே ஏற்கிறான் .அதே நேரம் பெண்கள் வீரத்துடன் விளங்க வேண்டும் என்று அவளை இந்தியக் காவல் பணிக்கு மடை மாற்றியும் விடுகிறான் .

சூர்யாவின் தாய் ஒரு நேரிய--- சீரிய ---வீரிய பெண் நீதிபதி.சூர்யாவுக்கு ஒரு நண்பன் . அவனது பெயர் நாகேந்திரன் . சிறந்த தமிழ் ஆர்வலன் . நல்ல தமிழில் பேசுபவன் . பெரியார் அண்ணாவை போற்றிப் புகழ்பவன் . பெண்ணுரிமை பேசுபவன் . பாரதி தாசனின் பாட்டை பாடுபவன் . "வரதட்சணை என்பது வடமொழி . கல்யாணப் பரிசு என்றுதான் சொல்ல வேண்டும்" என்ற அளவுக்கு தமிழாளன்..
அவனது பெண்ணுரிமைக் கருத்துகளையும் நல்ல தமிழையும் கண்டு அன்பு கொண்டு செல்வச் செழிப்பான ஒரு இளம்பெண் அவனை விரும்புகின்றாள் . இதயத்தைப் பறி கொடுக்கின்றாள் .

ஆனால் , அய்யகோ!
திருமணத்துக்குப் பிறகுதான் அவன் மிகப் பெரும் பெண் பித்தன்; பணத்துக்காக பெண்களை ஏய்த்து சீரழிப்பவன் என்பது புரிகின்றது; தெரிகின்றது . தன் நண்பனின் சுய ரூபம் அறிந்த சூர்யாவும் மனம் கொதிக்கிறான் .

இந்த சூழலிலே , வனத்தில் மரங்களை முறையற்ற முறையிலே வெட்டிக் கடத்துகின்ற சமூக விரோதச் செயலால் சூர்யாவால் நட்டப் பட்டு கோபத்திலே இருக்கும் ஒரு கொடியவன் , சூர்யாவைப் பழிவாங்க இந்த நட்பு மோதலைப் பயன்படுத்துகிறான் .

தன் மனைவியைக் கொல்லும் நாகேந்திரன் அந்த மரக் கடத்தல்காரனின் திட்டப்படி பழியை சூர்யா மீது சுமத்தி கராக்கிரகத்துக்கு அனுப்புகின்றான் . படிப்பு முடித்து காவல் துறை உயர் அதிகாரியாக பணியில் சேரும் காதலியும் பெண் நீதிபதியாக பணி நடாத்துகிற தாயாரும் சேர்ந்து சூர்யாவை எப்படிக் காப்பாற்றுகின்றனர் என்பதுதான் இந்த பெண் சிங்கம் என்பதை தெரிவிக்க வேண்டிய கடமை இங்கு எனக்கு உண்டு என்பதை நீங்கள் அனைவரும் உணர வேண்டுமாய்ப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் ..

கலைஞரே முன்பு எழுதிய பாசப் பறவைகள் படம் போல இரண்டாவது பகுதி கனமாக வருமோ என்று நம்பவைத்து .... நன்றாகவே ஏய்த்து விடுகிறார்கள் என்பதை இங்கு நான் குறிப்பிட்டே ஆக வேண்டும் .

படத்தின் ஒளிப்பதிவும் வண்ணக் கலவையும் படம் பிடிக்கப்பட்ட பல இடங்களும் நம் கண்களுக்கு கவின்மிகு விருந்தாய் அமைந்துள்ளன என்பதை உங்களுக்கு தெரிவித்திட நான் மறந்தேன் என்றால் அது நெறியாகாது .

அதே போல 'கலாவதி என்று பெயர் வைத்துக் கொண்டு காலாவதி ஆகிவிட்டாயே' போன்ற சில பல இடங்களிலே கலைஞரின் வசனத்தின் அழகு ரசிக்க வைக்கின்றது .
அதே போல சென்னையின் முக்கியச் சாலைகளின் பெயரை ஆங்கிலத்திலே நண்பன் சொல்கையிலே அதை தடுத்தாட்கொண்டு மறுத்து அண்ணா சாலை என்றும் காமராசர் சாலை என்றும் அழைக்க வேண்டும் என்று நாயகன் அறிவுறுத்துகிற இடத்திலே வசனம் பட்டொளி வீசிப் பறக்கின்றது என்பது நூற்றுக்கு நூறு உண்மையேயாம் !

ஆயினும் ஒரு மூத்த வசனகர்த்தாவான கலைஞர் தனது வசனத்திலே அதுவும் பெண்களை உயர்த்தி கதையமைத்து எடுக்கப் பட்டிருக்கிற படத்திலே வரும் வசனத்திலே ....அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு கண்ணியமான பெண்மணியை மேட்டர் என்று கீழான சொல்லால் விமர்சித்து வசனம் எழுதியிருத்தல் முறையாமோ ?

அதே போல தான் வசனம் எழுதிய படத்திலே தன்னைத்தானே உயர்த்தி "தலைவர் சொன்னாரு "என்று தற்புகழ்ச்சியாக எழுதிக் கொள்ளுதல் நெறியாமோ?
ஒருக்கால் அந்த வசனங்களை கலைஞர் எழுதவில்லை . படத்திலே நடிக்கும்போது தம்பி விவேக்தான் சேர்த்திருக்கிறார் என்றால் , படம் உருவாகிய ஒவ்வொரு கட்டத்திலும் பலமுறை படத்தை பார்தது பார்தது ஆலோசனை சொன்ன கலைஞர் இவற்றை தவிர்த்திருக்க முடியாதா? இதை தயை கூர்ந்து அனைவரும் எண்ணிப் பார்த்திடல் வேண்டும் .

படத்தின் ஆரம்பத்தில் எழுத்துப் போடுகின்ற தருணத்திலே பாடலாசிரியர்கள் பெயர்கள் வரும்போது கலைஞர் பெயரைப் போட்டுவிட்டு பின்னர் பாரதிதாசன் பெயரைப் போடுகிறார்கள் . இது நியாயமா? நல்லவேளை படத்தில் திருக்குறள் சிலப்பதிகாரம் போன்றவற்றைப் பயன்படுத்த வில்லையே . பயன்படுத்தியிருந்தால் திருவள்ளுவர் , இளங்கோ அடிகள் பெயர் கூட கலைஞர் பெயருக்கு கீழே வந்திருக்குமே என்ற அச்சம் எழுவதை தவிர்த்திட இயலவில்லையே .

படத்தில் வரும் ஒரு சுவரொட்டியிலே 'கண்டு பிடித்து' என்ற சொல் 'கண்டுப்பிடித்து ' என்று எழுத்துப் பிழையோடு வருகிறது . முத்தமிழறிஞரின் படத்தில் முடமான தமிழா ? வேதனை ! வேதனை !

மற்றொரு காட்சியிலே அரசு வழக்கறிஞர் அநியாயமாக வாதட பின்னணிக் குரலிலே தம்பி ராதாரவி "அரசு வழக்கறிஞர் அல்லவா? அப்படிதான் பேசுவாரு" என்கிறார் . முதல்வராகவும் இருக்கிற கலைஞரின் படத்திலே இப்படி ஒரு வசனம் வருதல் முதல்வருக்கு ஏற்புடையதுதானா என்ற கேள்வியை இந்த வலைப் பூ மாமன்றத்தின் மூலம் கேட்கிறேன் .

பெரும்பாலான காட்சிகளில் ஒளிப்பதிவுக் கருவியை இயக்கி விட்டு தேநீர் அருந்தப் போய்விட்டாரோ என்று என்னும் அளவுக்கு நின்ற நெடுமரமாய் நிற்கிறது ஒளிப்பதிவுக் கருவி . விளைவாக , பாடல் காட்சிகளில் எதோ மேடையில் ஆடுவது போல நடிப்பவர்கள் எல்லோரும் ஆடிக் கொண்டே போகின்றனர் .

படத்தில் ஐம்பது லட்ச ரூபாய் காசோலை என்று வருகிறது . ஆனால் காட்சியிலே இருக்கிற காசோலையில் பத்து லட்ச ரூபாய் என்று ஆங்கிலத்திலே எழுதப் பட்டிருக்கிறது . அம்மவோ!

படத்தில் சிறந்த சிறப்பம்சம் என்றால் அது பாடல்கள்தான் .

சற்றே பழைய மெட்டுக்களில் ஆனால் இனிய மெட்டுக்களில் ஒலிக்கும் பாரதிதாசன் பாடலாகட்டும் .....அந்தகால இசை விற்பன்னர்களின் பெயர்களை இணைத்து கலைஞர் எழுதியிருக்கும் "வீணையில் எழுவது வேனுகானமா"என்ற அற்புதமான பாடல் ஆகட்டும் .. வைரமுத்து .பா.விஜய் ஆகியோர் எழுதிய பாடல்கள் ஆகட்டும் . அருமை ! பாராட்டுக்கள் !

இரண்டாம் பகுதியில் ஒரு வலுவான நீதிமன்ற வாதப் பிரதிவாத அறிவுப் பூர்வ காட்சிகளை எதிர்பார்த்தால் ரகசியமாகப் படம் பிடிக்கப் பட்ட ஒரு காட்சியைக் காட்டி அதையே சாட்சியாக வைத்து படத்தை முடித்தல் பெரும் ஏமாற்றமாக அல்லவா அமைந்து விட்டது .

நீதி மன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப் பட்ட நாகேந்திரன் அடுத்த காட்சியிலேயே நீதிபதி வீட்டுக்கே வந்து நீதிபதியை கொலை செய்துவிட்டுப் போகிறார் . தமிழக முதல்வரின் திரைக்கதையிலேயே தமிழக காவல்துறையை இவ்வளவு மோசமாக சித்தரித்ததால் பின்னர் மற்ற படைப்பாளிகளை எப்படிக் குறை சொல்ல முடியும் . இதை அனைவரும் எண்ணிப் பார்த்திடல் வேண்டும் .

சென்னை சங்கமம் போன்றவற்றின் பிரச்சார களமாக, காட்சிகள் இருத்தல் நன்றா?

இவை எல்லாவற்றையும் விட கொடுமையான ஒன்றை நினைக்க நினைக்கக உள்ளம் குமுறும் ஒரு கொடுமையை அவலத்தை நான் குறிப்பிடாமல் விட்டால் இந்த விமர்சன உரை முழுமையாகாது என்பதால் நேரம் கடந்தாலும் அது பற்றி சற்று விரிவாகவே கூற விழைகிறேன் .

தமிழ்நாட்டிலே -- தமிழ் மண்ணிலே -- இந்த திருவிடத்திலே -- நல்ல தமிழ் பேசுவோர் அறுகிக் கொண்டிருக்கும் அவலச் சூழலிலே , சுயமரியாதைச் சிந்தனைகள் கொண்ட இனமான மாந்தர்கள் இல்லாது போய்க் கொண்டிருக்கு கையறு நிலையிலே ---

ஒரு நல்ல தமிழ்ப் பேச்சாளனை , தமிழ் இலக்கியவாதியை, பெண்ணுரிமைக் கருத்தாளனை , பாரதிதாசன் பாடல்கள் பாடும் ஒருவனை , பெரியார் அண்ணா புகழ் பாடும் ஒருவனை , காமந்தகனாக , பெண் பித்தனாக , பணப் பேயாக, கட்டிய மனைவியை முதலிரவு அறையிலே அந்த சப்ர கூட மஞ்சத்திலே அரை நிர்வாணமாகப் படம் பிடித்து இணையத்திலே ஏற்றி விடுவேன் என்று மிரட்டும் கீழ்த்தரமானவனாக காட்ட எப்படி தமிழினத் தலைவர் , முத்தமிழ் அறிஞர் , ஐந்தமிழ் அறிஞர் , என்றெல்லாம் அழைக்கப் படுகிற கலைஞருக்கு மனது வந்தது . அப்படிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?இது நியாயமா? தர்மமா? அடுக்குமா?

முன்பு நீதிக்குத் தண்டனை என்ற படத்தில் அரசியல்வாதிகள் செய்யும் கொடூரங்களைக் கலைஞர் காட்சிப் படுத்தியபோது கலைஞர்' தன் வாழ்க்கையைப் பின் நோக்கிப் பாஎத்திருக்கிறார்' என்று அன்றைய மூத்த பத்திரிக்கையாளர்கள் எழுதியது , எதையும் தாங்கும் என் இதயத்திலே இன்னும் நினைவிருக்கிறது

"சமத்துவம் பெண்ணுரிமை பகுத்தறிவு சுயமரியாதை பெரியார் அண்ணா போன்றவை எல்லாம் ஊருக்குதான் நமக்கு இல்லை " என்று எதிர்நாயகன் சொல்லும்போது "தூக்கத்தில் தன்னை மறந்து எழுதிவிட்ட வசனமா இது " என்றும் .......

"பெரியார் அண்ணா போன்றவர்கள் இன்று உயிரோடு இல்லை என்பதற்காக அவர்களின் பெயர் சொல்லி ஏமாற்றி பிழைப்பவர் இவர் "என்று வக்கீல் நாகேந்திரனைப் பார்தது சொல்லும் வசனம் வரும்போது " நிலைக்கண்ணாடி முன்பு உட்கார்ந்து எழுதிய வசனமா இது " என்றும் அரங்கில் குரல்கள் எழுவதை தவிர்த்திட இயலவில்லையே .

நல்ல தமிழ் பேசுபவன் , தமிழ் இலக்கியம் போற்றுபவன் , பெண்ணுரிமை சுயமரியாதை பேசுபவன் , பாரதிதாசன் பாடல் படிப்பவன் அயோக்கியன் என்றால் அப்படிப்பட்டவர்களில் மூத்த அயோக்கியன் யார் என்றும் ஒரு வேளை கலைஞர்வேறு யாரையும் சொல்கிறார் என்றால் கி.வீரமணி மீது அவருக்கு என்ன கோபம்? என்றும் கூட கிண்டல்கள் எழுவதைப் பார்தது நெஞ்சம் குமுறுகிறதே!

திராவிட இயக்கவாதிகளின் உண்மை முகத்தை கலைஞரே படம் பிடித்துக் காட்டிவிட்டார் என்று மற்றோர் எக்காளமிடமாட்டர்களா?


அம்மட்டோ !

ஒரு வெகு சாதாரணமான-- காலம் கடந்த பாணியில் வந்திருக்கும் படத்தில் ஒரு அயோக்கியனை தமிழ் உணர்வாளன் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
ஈழத்துக்கு இழைக்கப் பட்ட துரோகம் கண்டு பொங்கி எழுந்த உண்மையான தமிழ் உணர்வாளர்களைக் கேவலப் படுத்தும் முயற்சியா இது ?

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தும் சூழலில் ஏன் இப்படி சிங்காரித்து மூக்கறுக்கும் ... இல்லையில்லை கழுத்தறுக்கும் முயற்சி ?

புண்பட்டது நெஞ்சம் !

---என்பதை மிகுந்த வேதனையோடும் ஏமாற்றத்தோடும் உள்ளக் குமுறலோடும் கூறி , இந்த அளவில் என் உரையை முடிக்கிறேன் .
நன்றி வணக்கம் !