Wednesday, November 25, 2009

# ஏழு மலையான் கோவிலுக்குள் நாலு லட்சம் கொலையான்!


சிங்களக் காடையன் ராஜ பக்சேவின் திருப்பதி விசயத்தைக் கண்டித்து , 'தமிழக அரசியல்' வார இதழில் நான் எழுதிய கவிதையின் அசல் வடிவம் !( தாமதமான மேலேற்றுதலுக்கு மன்னிக்கவும்)

அன்று....
திருப்பதி
குருதிப் பதியானது !

மலரார்ச்ச்னை
நடக்குமிடத்தில்
எலும்புகளால்
அர்ச்சித்தவனின்
புன்னகை !

ஏழு மலையான் கோவிலுக்குள்
நாலு லட்சம் கொலையான்!

மாலவன் குன்றத்தில்
மரியாதை சுமந்தது ,
ஒரு ரத்தக் காட்டேரி .

கர்ப்பக் கிரகங்களைப்
பிளந்த கைகளுக்கு
கருவறையில் இருந்து
பிரசாதம்.

குலக் கொடிகளைச்
சிதைத்த விரல்கள் ,
கொடிமரத்தைத் தொடலாமா?

புத்த மதத்தைப்
பித்த மதமாக்கியவர்களுக்கு
இந்து மதத்தையும்
இழிவு செய்ய அனுமதி .

தமிழ் வளர்த்த வைணவத்தின்
தகை சார்ந்த திருப்பதியில்
தமிழின விரோதிக்குப்
பூரண கும்பம் .
குடத்துக்குள் இருந்தது ,
தமிழனின் ரத்தம்தானே?

திருப்பதி லட்டில்
ஈழத் தமிழனின்
சதைகளையும் சேர்க்க
ராஜபட்சேவுக்கு
ரகசிய ஒப்பந்தம்?

திருப்பதி
தீர்த்தக் குளத்தில்
ரத்தத்தைக் கலக்க
பாராளுமன்றம்
பரந்த மனதோடு
அனுமதி !

விரைவில்
எதிர்பாருங்கள் ...
திருமலையில்
இலங்கையின் உதவியால்
புதிய 'சைனீ 'ஸ்
அசைவ உணவு விடுதி!

ஒரு வேளை
ராஜபட்சே
இப்படி யோசித்திருக்கலாம்
"இந்தியாவின் துணையோடு
இலங்கைத் தமிழனுக்கு
நாம் போட்ட நாமம்....
ஆஹா...
இதா இங்கே
வண்ணமயமாக.
ஏழுமலையானின்
- இல்லையில்லை-
சோனியாவின்
கருணையே கருணை!

சரியப்பா...
எறிகுண்டு வீசியவனுக்கு
'ஜருகண்டி' சொன்னீர்களா?

திருமலையில்
மார்கழியில்
திருப்பாவை
ஒலிப்பதற்குப் பதில்
இனி தமிழனின்
ஓலக்குரல்
ஒலிக்குமோ?
அதில் எங்கள்
ஆண்டாள் நாச்சியின்
கண்ணீரும் கலக்குமோ?

அந்தக்
கோவில் சுவர்களின்
கோலமிகு
தமிழ்க் கல்வெட்டுக்கள்
திட்டமிட்டு அழிக்கப்படும்
நிலைபோய் ...
இனி ,
அவமானம் தாங்காமல்
தானே சிதையுமோ?

மிருக வெறியின்
பல்லிடுக்குகளில்
சிக்கியுள்ள
மனிதச் சதைத்
துணுக்குகளை எடுக்க ,
திருப்பதிக் குடையின்
காம்புகளா?

தீட்டுப் பட்டால் ...
கிரகணம் பிடித்தால் ...
ரத்த வாடை வீசும்
நிலைவந்தால் ...
கோவிலைக் கழுவிப்
பரிகாரம் செய்ய
வேண்டுமென்று
குறிப்பிட்டுச் சொல்பவர்களே...

இப்போது
திருப்பதிக் கோவிலைக் கழுவ ,
இருக்கிற தண்ணீர் போதுமா?
இல்லை ...
இன்னும்
மழைபெய்ய வேண்டுமா?